CLICK TO VISIT LATEST POSTS

Monday, February 14, 2011

முடங்கிக் கிடக்கும் அஞ்சல்துறை-என்.ஆர். ஸத்யமூர்த்தி

         இந்தியா ஒன்பது விழுக்காடு வளர்ச்சியடைந்துவிட்டது; பத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டது என்றெல்லாம் பூரிப்படைகிறோம். வளர்ச்சி என்றால், முந்தைய தரத்திலிருந்து உயர்நிலை காண வேண்டும். அத்தகைய வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் பிரதிபலிக்க வேண்டும்.
         அஞ்சல் துறையைப் பொறுத்தவரையில், அதன் முதன்மைக் கடமை, தபால்களைக் கையாள்வதே. இந்த விஷயத்தில் அஞ்சல் துறையின் வளர்ச்சி  மெச்சும்படியாக இல்லை. கணினிகளும் குளிர்பதனமும் காணப்படுகின்றதேயன்றி முதன்மைக் கடமை முடங்கித்தான் கிடக்கிறது. முன்பெல்லாம், தபால்கள், எளிதாக மறுநாளில் கிடைக்கும். ஐம்பது கி.மீ. தொலைவுள்ள இடங்களுக்கு அன்றே பட்டுவாடாவும் நிகழும். சாதாரண பேரூர்களிலும் கூட இரண்டு அல்லது மூன்று பட்டுவாடாக்கள் இருக்கும். தபால்கள் அனுப்புவதும் இரண்டு, மூன்று முறைகள் நடக்கும். அஞ்சலகங்களின் வேலை நேரங்கள், அவ்வூருக்குத் தபால் பைகளைக் கொண்டுவரும் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றை ஒட்டியே அமையும்.
சீக்கிரத்தில் தபால் பைகள் வருவதால், அங்கிருந்து கிளைத் தபால் அலுவலகங்களுக்கும் சீக்கிரமே தபால்கள் போய்ச் சேரும். அங்கிருந்து பல சிற்றூர்களுக்குப் பட்டுவாடா நிகழும். ÷ஒரு தபாலைப் பெற்ற ஒருவர், அன்றே அதற்குப் பதில் கடிதம் எழுத வாய்ப்பு இருந்தது. அத்தகைய வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது அஞ்சல் துறையின் லட்சியமாக இருந்தது. சீக்கிரமான பட்டுவாடா, காலம் தாழ்த்திய பை கட்டுதல் என்பது துறையின் தாரகமந்திரமாக இருந்தது. தபால்காரர் வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அதனால் மக்களிடையே தபால்காரர்களுக்கு மரியாதையும் அன்பும் இருந்தன. தபால் பெட்டிகள் மக்களுக்குத் தேவையான இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவை தினமும் இருமுறை திறக்கப்பட்டன. தபால் பெட்டிகள் இல்லாத கிராமங்களில், தபால்காரர்களிடம் தபால்களைக் கொடுக்கலாம்.
இத் தபால் பெட்டிகள் குறித்த காலத்தில் ஊழியர்களால் திறக்கப்படுகின்றனவா என்பது தினமும் சோதனை செய்யப்பட ஏற்பாடுகள் இருந்தன. பால்காரர் வருவதற்குமுன் தபால்காரர் வரும் ஊர்களும் இருந்தன. சேமிப்பு வங்கி உள்ளிட்ட எல்லாச் சேவைகளிலும் சிறந்து விளங்கி, மத்திய அரசு இருப்பதை நினைவூட்டுதாய், மத்திய அரசின் பிரதிநிதியாய் கிராமப்புறங்களிலெல்லாம் மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தது, அஞ்சல் துறை.
இச் சிறப்புகளெல்லாம் பொய்யாய், பழங்கதையாய்ப் போய்விட்டன. இப்பொழுது தபால்கள் மறுநாள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. பிரிப்பகங்களில் தாமதப்படாதவைகூட அஞ்சலகங்களிலும் அவற்றின் கீழேயுள்ள கிளை அஞ்சலகங்களிலும் சென்றடையும் நேரம், பட்டுவாடாவைப் பாதிக்கிறது.
அஞ்சலகங்களின் வேலைநேரம் மெயில்கள் வரக்கூடிய அல்லது செல்லக்கூடிய நேரத்துக்கு ஏற்ப அமையும் கொள்கை கைவிடப்பட்டு, காலை 8 மணிக்கு அஞ்சலகம் திறக்கப்பட்டால் போதும் என்ற நிலையைப் பின்பற்றுகிறது அஞ்சல் துறை. அஞ்சலகங்கள் மூடப்படும் நேரம் மாலை 6 என்றிருந்தது 5 ஆகி, இப்பொழுது 4 ஆகக் குறைக்கப்படும் நிலை கண்டு வருந்தவில்லை அதிகாரிகள். விரைவுத் தபால்களின் நிலையே விமர்சனத்தைத் தவிர்க்க இயலாததாயுள்ளது. உள்ளூர் தபால்கள் கிடைக்கவே 3 நாள்கள்கூட ஆகின்றன.
இப்பொழுது அஞ்சல் துறை பெருமையோடு பேசக்கூடிய சேவைகள், மணியார்டர், சேமிப்பு வங்கி, சாதாரண காப்பீடு, கிராமத்து மக்களையும் ஈர்க்கும் காப்பீடு ஆகியவையே. இவற்றிலும் காலதாமதமும் குறைகளும் அதிகமாகவே தென்படுகின்றன.
இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம், அஞ்சல் துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும், சேவை சிறப்புற செலவு மிகும்; கட்டுபடியாகாது எனவும் கருதுகின்ற இந்திய அரசின் எண்ண ஓட்டமுமே ஆகும். இந்திய விவசாயிகள் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே இறந்து கடனையே தம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்கின்றனர் என்பது இந்திய விவசாயம் பற்றிய எந்த ஆய்வுக்கும் நிரந்தர முகவுரையாகத் தொடர்வதுபோல, அஞ்சல் துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்கிற நிரந்தர நினைப்பு அத் துறையையும் இந்திய மக்களையும் காயப்படுத்தி வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் துறையில் தனியார் கூரியர்கள் எப்படிக் கொழிக்க முடிகிறது என்பது சிந்திக்கப்பட வேண்டும்.
ஒரு பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த எவ்வித ஆட்சேபணையுமின்றி இரண்டு ரூபாயோ மூன்று ரூபாயோ மக்களால் கொடுக்க முடிகிறபோது, அஞ்சலட்டையின் விலையை வெறும் ஐம்பது காசுகளாகத் தொடர்வது எவ்விதத்தில் ஏற்புடையது? எல்லோரிடமும் கைப்பேசிகள் காணப்படும்போது, கார்டுகளின் விலையை 50 காசுகளாகவே வைத்திருப்பதால் யார் மெச்சுவார்கள்? இச் சலுகை, தனியார் நிறுவனங்களுக்கல்லவா பயன் தருகிறது? வெங்காயம் முதல் வெந்தயம் வரை சதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும்போது அஞ்சலட்டையை அதேவிலையில் விற்பதற்கு யார் பரிந்துரைத்தார்களோ தெரியவில்லை. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. சிக்கன வாழ்வு, சேமிப்பு என்பவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. அவர்கள் வேண்டுவது குறைகளற்ற, நம்பகமான, தரமான சேவையைத்தான். அதற்குரிய விலையைக் கொடுக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். அரிசி, காய்கறிகள், பெட்ரோல், எரிவாயு ஆகியவற்றின் தடையில்லா விலையேற்றங்கண்டு தளராதவர்கள். அஞ்சல் துறையில் அஞ்சலட்டை, மணியார்டர் போன்றவற்றுக்கு தரமான சேவை தவறாது என்றால் நியாயமான விலையேற்றத்தை வெறுக்கமாட்டார்கள்.
அஞ்சல் துறையின் வருமானம் குறைந்ததற்குக் கூரியர் சேவையின் வளர்ச்சியும் ஒரு காரணம். அஞ்சல் துறையின் வருமானம் குறைந்ததால், அதன் சேவையின் தரம் குறைந்தது. சேவையின் சிறப்பு கெட்டதால், கூரியர் நிறுவனங்கள் பெருகி வளர்ந்துள்ளன.
இந்திய அஞ்சலகச் சட்டம் 1898, பிரிவு 4-ன்படி, கடிதங்களைச் சுமந்து சென்று, உரியவரிடம் சேர்ப்பிக்கும் ஏகபோக உரிமை, இந்திய அஞ்சல் துறைக்கே உள்ளது. வேறு எவரும் இத் தொழிலில் ஈடுபடக்கூடாது, அரசு மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற ஏகபோக உரிமை பெற்ற அரசுக்கு, பரந்துபட்ட பாரத நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும், மூலைமுடுக்குகளில் இருக்கும் சிற்றூர்களுக்கும் நியாயமான கட்டணத்தில் தபால்களைப் பட்டுவாடா செய்யும் கடமையுமுண்டு.
இன்றைய கூரியர் சேவைகள் நகர்ப்புறங்களையே கருத்திற்கொண்டு செயல்பட்டு, அஞ்சல் துறையின் கணிசமான வருமானத்தைக் கைப்பற்றி விடுகின்றன. கிராமப்புறங்களில் அவை செயல்படுவதில்லை. வருமானத்தின் கணிசமான பகுதி போனபின், அஞ்சல் துறை தன் கிராமப்புறச் சேவைகளைச் செய்யப் போதிய நிதியில்லாமல் போகிறது. கூரியர் சேவை இந்திய அஞ்சலகச் சட்டத்துக்கு முரணானது. தமக்கு உரிமையில்லாததும் தடை செய்யப்பட்டதுமான துறையில், அரசுக்கே உரிய பிரதேசத்தில், அரசுக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தாமலும் அரசின் எவ்விதச் சட்டங்களுக்கும் உள்படாமலும் பதில் சொல்ல வேண்டிய சட்டப்பூர்வமான பொறுப்பு எதுவும் இல்லாமலும் கூரியர் நிறுவனங்கள் செயல்படுவதை ஒரு ஜனநாயக அரசு எப்படி, எவ்வளவு காலம் அனுமதிக்க முடியும்? இக் குறைகளையெல்லாம் நீக்கி, கூரியர் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசு முயன்றுவந்தது. காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் அமைச்சராயிருந்தபோது 2002-ல் சட்ட முன்வரைவு ஒன்றை அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அது காலாவதியாயிற்று. பின்னர் இன்னுமொரு முன்வரைவு 2006-ல் அன்றைய அஞ்சல் துறைச் செயலர் முனைவர் யு. சீனிவாசராகவனின் உழைப்பால், அமைச்சர் தயாநிதி மாறனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள், 300 கிராம் எடை வரையிலான கடிதங்களைக் கையாளும் ஏகபோக உரிமை, அஞ்சல் துறைக்கே உண்டு, தனியார் கூரியர்கள் அரசிடம் பதிவு பெற வேண்டும். உள்நாட்டில் மட்டும் இயங்கப் பதிவுக் கட்டணம் ரூ.25,000, புதுப்பிக்க ஆண்டுக்கு ரூ.10,000 வெளிநாடுகளிலும் இயங்கப் பதிவுக் கட்டணம் ரூ.10 லட்சம், புதுப்பிக்க ஆண்டுக்கு ரூ.5 லட்சமாகும். இத்தகைய முக்கியமான சட்டம் நான்காண்டுகள் ஆகியும் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சட்ட விரோதமான அமைப்பு, தொடர அனுமதிக்கப்பட்டிருப்பது விந்தையே!
தாராளமயமாக்கப்பட்ட, திறந்த பொருளாதார முறையில், அஞ்சல் துறை ஏகபோக உரிமை கொண்டாடுவது சரியல்ல என்று வாதிடுகின்றன தனியார் கூரியர் நிறுவனங்கள். பார்ப்பதற்கு இவ்வாதம் நியாயமானதாகக்கூடத் தோன்றும். ஆனால், இந்தத் தனியார் கூரியர்கள் கிராமங்களின் சேவையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வருமானம் குறைவான கிராமப் பகுதியை அரசு சுமந்துகொண்டு வருமானம் மிக்க நகர்ப்புறங்களின் லாபத்தை மட்டும் தனியார் அபகரிப்பது எப்படி நியாயம்? அரசுக்கு - மக்களுக்குச் சொந்தமான கனிமவளங்களை, எத்தகைய கட்டுப்பாடுமின்றித் தனியார் தோண்டிச் செல்வதைப் போலாகும். அஞ்சல் துறையின் அலுவலகங்கள் வசதி குறைந்த இடிந்த, வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு, அஞ்சல் பைகளைப் பேருந்துகளில் அனுப்பப் பெரும்பாடு படுவதும், கூரியர் சேவைகள் நல்ல கட்டடங்களில் சொந்த ஊர்திகளுடன் செயல்பட்டுக் கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கவை.
பதிவுக் கட்டணம், அரசின் ஏகபோக உரிமை போன்ற அம்சங்களை இந்தியக் கூரியர் நிறுவனங்கள் எதிர்ப்பது, எதிர்பார்த்ததுதான். சட்ட முன்வரைவு, நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது, தீர்வு காணலாம்.
சுமார் 30 ஆண்டுகளாகத் தனியார் கூரியர் சேவைகள் இயங்கி வருகின்றன. அவை 20 ஆண்டுகளாகச் செல்வத்தில் கொழிக்கின்றன. சாதாரணத் தபாலுக்கு அஞ்சல் துறை ஐந்து ரூபாய் வசூலிக்க, கூரியர்களோ ஓராண்டுக்கு முன் வரை ரூ.15 வாங்கி வந்த கட்டணத்தை,  இப்பொழுது ரூ.25 ஆக உயர்த்திவிட்டன. அஞ்சல் துறையின் சேவைத் திறன் குறைந்ததைத் தம் மூலதனமாக்கிக் கூரியர்கள் கொழிப்பதைப் புரிந்துகொண்டு, அஞ்சல் துறை விழித்துக் கொண்டதன் வெளிப்பாடுதான், 2002-ல் கொண்டுவர முயன்ற சட்டத்திருத்த மசோதா. 2007-ல் மீண்டும் முயன்றும், உள்நாட்டுத் தனியார் எதிர்ப்பாலும் அச்சுறுத்தலாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
2002-லிருந்து இன்று வரையிலான எட்டு ஆண்டுகளில் அஞ்சல் துறைக்குத் தனியார் சேவைகள் தர வேண்டிய பதிவுக்கட்டணமும் புதுப்பிக்கும் கட்டணமும் பல கோடிகளாகும். இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
நன்றி: தினமணி