CLICK TO VISIT LATEST POSTS

Monday, February 7, 2011

Swiss bank and India



ஸ்விஸ் வங்கியும் இந்தியாவும்


இந்தியாவின் 70 லட்சம் கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கியில் உள்ளதாக செய்திகள் பத்திரிகையில் வந்தவுடன் நம்மில் பலர் வாயடைத்துப் போகிறோம். ஏன் நம் ஆட்கள் ஸ்விஸ் வங்கியில் பணத்தை வைத்துள்ளனர் என்ற கேள்வி பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் மொத்தம் 327 வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உள்ளது. இதில் 198 வங்கிகள் அடங்கும். இதில் 13 வங்கிகள் குடும்பம் சார்ந்த வங்கிகளாகும்.
ஸ்விட்சர்லாந்தின் மிகப் பெரிய இரண்டு வங்கிகளாகும். அந் நாட்டில் உள்ள மொத்த வைப்பு நிதியில் 50 சதவீதம் இந்த 2 வங்கிகளில் மட்டும் உள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா தான் தனியார் வங்கிகளின் பிறப்பிடம். தனியார் வங்கிகளின் உலக தலைமையிடமாக ஜெனிவா இருந்து வருகிறது. 55 சதவீத ஸ்விட்சர்லாந்தின் பணம் ஜெனிவாவில் தான் உள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் வங்கி துவக்க சில நடைமுறைகள் உள்ளது.
ஸ்விஸ் குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
ஸ்விஸூக்கு அருகில் உள்ள வெளிநாட்டவர்கள்
ஸ்விஸூக்கு தொலைவில் உள்ளவர்கள். ஸ்விஸூடன் ஏதாவது ஒரு வியாபார தொடர்போ அல்லது வீடோ இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் வங்கியில் கணக்கு துவங்குவதும், கணக்கை முடிப்பதும் மிகவும் எளிது, கணக்கை துவங்குவதற்கு மில்லியனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுவிஸ் தேசத்தின் பணமான 5000 பிராங்க் இருந்தால் போதும். ஒரே ஒரு முறை வந்து வங்கி எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். கணக்கை துவக்குவதற்கோ, பண பரிவர்த்தனைகளுக்கோ வாடிக்கையாளர்கள் நேரில் வரவேண்டியதில்லை. இன்டெர்நெட் ஆன்லைன் மூலமாக அனைத்தையும் செய்து கொள்ளலாம். பெயரை குறிப்பிடாமல், கணக்கு எண்ணை மட்டுமே சொல்லி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வங்கியில் மேலாளர் போன்ற ஒரு சிலரை தவிர, வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் கூட கணக்கு வைத்திருப்போர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு துரம் பாதுகாப்பானது, வங்கி நடைமுறைகள் எளிமையானது, என்று ஸ்விஸ் வங்கிகள் விளம்பரம் செய்கின்றன. சேமிப்பிற்கான வட்டி விகிதம் குறைவு. இருந்தாலும் கணக்குகளின் ரகசியத் தன்மைக்காக இவ்வங்கிகளை பெரும் பணக்காரர்களும், வரி ஏய்ப்பு செய்பவர்களும் இவ்வங்கியை நாடிச் செல்கிறார்கள்.
ஏன் சுவிஸ் வங்கி?
ஸ்விஸ் சட்டப்படி வங்கி கணக்குகளின் விவரங்களை வெளியே யாரிடமும் தெரிவிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். இதற்காகவே 1934 ஆம் ஆண்டு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டப்படி வாடிக்கையாளரின் கணக்கு பற்றிய விவரங்களின் ரகசியத்தை பாதுகாக்க தவறிய வங்கியினருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். வாடிக்கையாளர் சேமிக்கும் பணத்தின் நதிமூலம், ரிஷிமூலம் பார்ப்பதில்லை. சட்டத்திற்கு புறம்பான பணமா இருந்தாலும் அவை ஸ்விஸ் நாட்டில் குற்றம் ஆகாது. ஏமாற்றுக்காரர்களுக்கான வங்கியா என்று பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்டத்தில் ஒரு சரத்தை சேர்த்திருக்கிறார்கள். வங்கியில் கணக்கு வைத்திருப்போர் கடுமையான கிரிமினல் குற்றவாளி என்று ஸ்விஸ் நீதிபதி திருப்தி அடைந்தால் கணக்குகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். இவை குடும்ப உறவு சம்பந்தமான பாகப்பிரிவினை, விவாகரத்து போன்ற சிவில் சம்பந்தமான வழக்குகளுக்கு இது பொருந்தாது. மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தி கூட ஏமாற்றுக்காரர்களின் கணக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாக பெரிதாக தகவல் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கும், கொள்ளை இலாபம் அடித்தவர்களுக்கும், கணக்கில் வராத ஊழல் பணத்தை சேமிப்பவர்களுக்கும் புகழிடமாக ஸ்விஸ் வங்கி திகழ்கிறது. இவர்கள் கணக்கு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதற்கு சட்ட பாதுகாப்பு வேறு. இந்தியா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்குகிறதோ இல்லையோ, கணக்கில் வராத கள்ளப் பணம் சேமிப்பில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்துள்ள பணம் இந்தியாவின் அயல் நாட்டு கடனில் 13 மடங்காகும். 24 மணி நேரத்தில் கடன் அனைத்தையும் செலுத்திவிட முடியும். இவை இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம். இந்தியாவில் மற்ற வரிகளை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தாலும் இவற்றைக் கொண்டு 30 வருடங்களுக்கு பற்றாக்குறை பட்ஜெட் போட முடியும்.
இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 80,000 பேர் ஸ்விஸ் நாட்டிற்கு பயணம் செய்கிறார்கள். 25,000 பேர் மாதம் ஒருமுறையோ அல்லது இருண்டு மாதத்திற்கு ஒரு முறையோ அடிக்கடி பயணம் செய்கிறார்கள். இந்தியர்கள் சேமித்துள்ள பணம் ரூ.70 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அரசு இந்த பணத்தைப் கைப்பற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. நமது பிரதம மந்திரி மன்மோகன் சிங் அரசு இப்பணத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் அரசு முயற்சி எடுக்க தவறிவிட்டது என்று மாறி மாறி தேர்தல் களத்தில் விவாதித்துக் கொள்கிறார்களே ஒழிய உருப்படியாக எந்தக் காரியமும் நடைபெறவில்லை.
தாராளமயப் பெருளாதாரக் கொள்கை அமலாக்கம் தளர்த்திய கட்டுப்பாடுகள் ஊழல்களுக்கு வித்திட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல், காமன் வெல்ட் கேம்ஸ் ஏற்பாடுகளில் ஊழல். 2 ஜி தொலைத் தொடர்பில் ஊழல், நில பேர ஊழல், ஆதர்ஷ் நில ஒதுக்கீட்டில் முறைகேடு போன்ற மெகா ஊழல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பின்பாக பெரு முதலாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அவர்கள் சேமித்த சொத்துக்களும் பெருகியுள்ளன. உலக பணக்காரர்கள் தரவரிசையில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்பொருளாதார கொள்கைகளின் தாக்கத்தினால் சாதாரண ஜனங்களின் வாழ்நிலை பெரிய அளவிற்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ.20 ஊதியம் கூட பெறமுடியாமல் 74 சதவீதம் மக்கள் இருப்பதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட போதெல்லாம் அதன் மீது நடவடிக்கைகளுக்கு பதிலாக அவற்றை மூடி மறைப்பதற்கும், ஊழல் செய்தவர்களை பாதுகாப்பதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு முயற்சிக்கிறது. இப்படி ஊழல் புரிந்தோர் பணங்கள் தான் ஸ்விஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. அரிசி கிடங்குகளில் எலிகளுக்கு உணவாக தானியங்கள் வீணாக்கப்படுமேயழிய, தங்கள் வாழ்நிலைக் கான வழியில்லை என்று தற்கொலையை நோக்கி செல்வோருக்கு உணவு தான்யங்களை கொடுக்க மறுக்கும் கொடூர மனம் படைத்த அரசாக மன்மோகன் அரசு திகழ்கிறது. இதன்மூலம் ஆட்சியாளர்கள் யாரை சார்ந்துள்ளனர். யார் நலனை பாதுகாக்க உள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆகஸ்ட் 30, 2010 அன்று இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் இந்தியா_ஸ்விஸ் நாடுகளிடையே நடைபெற்றது. அதன்படி இந்திய அரசு ஜனவரி 2011 முதல் ஸ்விஸ் வங்கியில் உள்ள கணக்கு விவரங்களை கோரலாம் என்று சொல்லப்படுகிறது. அரசு முனைப்போடு முயற்சிகளில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறி. அரசு இத்தகைய அணுகுமுறையை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும், அதனையட்டிய போராட்டங்களும் தீர்வுக்கு வித்திடும்.
(கட்டுரையாளர் தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்)