தற்போதைய நவீன காலகட்டத்தில் நகரப்பகுதிகளில் தபால்காரர்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. ஆனால், கிராமப் பகுதிகளைப் பொறுத்த மட்டில் இன்னமும் தபால்காரர்தான் முக்கிய தகவல் தெரிவிப்பாளராவார். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொடக்க காலத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே தபால் சேவையும் இருந்தது. 1843}ம் ஆண்டுக்குப் பிறகுதான் தபால் சேவை இராணுவ நிர்வாகத்திலிருந்து மாறியது.
நீலகிரி மாவட்டத்தின் முதல் தபால் சேவை உதகையில் கடந்த 1826}ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது ஓர் எழுத்தர், இரண்டு டெலிவரி பியூன்கள் (இவர்கள்தான் தபால்காரர்கள்) ஆகியோரைக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த தபால் நிலையம் முதன் முதலில் எங்கு செயல்பட்டது என்பதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஆனால், 1829}ம் ஆண்டிற்குப் பின்னர் உதகைக்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதில் தபால் அலுவலகத்திற்கும் ஒரு கட்டடம் ஒதுக்கப்பட்டது. அக்கட்டடத்துக்கு அரசு மாளிகை எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இது பயணியர் மாளிகை என மாற்றப்பட்டது. உதகையில் உள்ள இக்கட்டடத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. சென்னை தபால் நிலையத்தை அடுத்து தபால் தலை வெளியிடப்பட்ட கட்டடம் இதுமட்டும்தான். சென்னை, உதகை, நாகப்பட்டினம் ஆகியவற்றின் தலைமை தபால் நிலையங்கள் மட்டும் தமிழகத்தில் பாரம்பர்யக் கட்டடங்களாக அறிவிக்கப்பட்டவை. பழமையானவை. உதகை தபால் நிலையம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைக், கோவையிலுள்ள ஓய்வு பெற்ற தபால்துறை அலுவலரும் தேசிய விருது பெற்றவருமான ஹரிகரன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
""நவம்பர் 1883}ம் ஆண்டில் உதகை தபால் நிலையம் ரைஸ் ஹவுஸ் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இது அரசினர் தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டதாகும்.
தொடக்க காலத்தில் தபால் துறையை வருவாய்த்துறையினரே நடத்தி வந்தனர். 1837}ல் கர்னல் கிங் என்பவர் நீலகிரியின் கமாண்டன்டாகப் பனியாற்றியபோது உதகைக்கான துணை தபால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சம்பளம் மாதத்திற்கு ரூ.100 ஆகும். 1840ல் அவர் கமாண்டன்ட் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அந்தப் பதவியே ஒழிக்கப்பட்டது. தொடர்ந்து கேப்டன் கன்னிங் உதகைக்கு தலைமை அலுவலராகவும், கூடுதல் நீதிபதியாகவும், துணை தபால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டார். 1843ம் ஆண்டு வரை இதே நிலையே தொடர்ந்தது. இதையடுத்து ராணுவக் கட்டுப்பாட்டிற்குப் பின்னர் ஹூட்ஜஸ் உதகையின் முதல் அஞ்சலகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கும் மாத சம்பளமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டது. 1844}ம் ஆண்டு இறுதியில் உதகைக்குச் சிறைக் குற்றவாளிகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்ட பின்னர் தபால் அலுவலகக் கட்டடம் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. 1845ம் ஆண்டில் உதகையின் முதல் தலைமை தபால் அலுவலகம் தொடங்கப்பட்டது. அது இன்றளவும் அதே இடத்தில் தொடர்கிறது. இந்த தபால் அலுவலகத்திற்குó அருகிலேயே பொது நூலகமும் அமைக்கப்பட்டது.
1866}ல் அந்த கட்டடம் தபால்துறையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. 1878}ம் ஆண்டு வரை அங்கேயே செயல்பட்டது. பின்னர் தபால் மற்றும் தந்தி சேவைகளும் தொடங்கப்பட்டன. பின்னர் 1883ல் வாட்டர்லூ ஹவுசிற்கு இந்த தபால் அலுவலகம் மாற்றப்பட்டது. அது பாம்பேகேசில் பகுதியில் அமைந்திருந்ததாகும்.
இந்த அலுவலகத்தில் ராணுவ கோப்புகளைப் பாதுகாக்கும் அலுவலகமும் செயல்பட்டது.
உலகின் முதல் தபால் தலை 1.5.1840ல் லண்டனில் வெளியிடப்பட்டது. அதன் பின்னரே தபால் தலை ஒட்டி அனுப்பும் முறை 6.5.1840ல் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னர் தூரத்திற்கு ஏற்ற வகையில் கட்டணத்தை செலுத்தி அனுப்பும் முறையே நடைமுறையில் இருந்தது. அப்போது சென்னையிலிருந்து உதகைக்கும், உதகையிலிருந்து சென்னைக்கும் தபால் அனுப்புவதற்கு எட்டணா கட்டணமாகும். இதற்கு 5 நாட்கள் அவகாசமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தந்தி முறையில் முதன் முதலில் பெங்களூரிலிருந்து உதகைக்கு தந்தி அனுப்பப்பட்டது. அப்போதைய கவர்னர் ஜெனரலின் வசதிக்காகவே இந்த தந்தி சேவை தொடங்கப்பட்டது. பெங்களூரிலிருந்து உதகைக்குத் தந்தி லைன் அமைப்பதற்கு அப்போதைய செலவு ரூ.25,500 ஆகும்.
டல்ஹவுசி பிரபு கோத்தகிரியில் இருந்தபோது அவருக்கு முதல் தந்தி மூலமான செய்தி 1.4.1855ல் அனுப்பப்பட்டது. அதே மாதத்தில் 25ம் தேதியன்று தந்தி சேவை பொதுமக்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. பின்னர் தந்தி சேவைக்கும், தொலைத்
தொடர்புக்கும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. 31.5.1883ல் இச்சேவை தொடங்கப்பட்டது.
1855ல் இச்சேவை விரிவாக்கப்ட்டபோது, இதில் பணியாற்றிய 16 பேருக்கு மாதாந்திர சம்பளம் 274.75 பைசாவாகும். உதகைக்கு ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு முன்னர் மைசூரிலிருந்து சீகூர் சந்திப்பு வழியில் உதகை வரை ரன்னர்கள் மூலம் தபால் சேவை செயல்படுத்தப்பட்டது. ரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையத்திலிருந்து ரன்னர்கள் மூலம் தபால் சேவை நடைபெற்றது.
பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய உதகை தபால் நிலையத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அண்மையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதன்மூலமே உதகை தபால் நிலையத்தின் பெருமைகளை நாம் அறிந்து கொள்ளலாம்'' என்றார்.