CLICK TO VISIT LATEST POSTS

Saturday, October 20, 2012

புதிய தேசிய அஞ்சல் கொள்கை - தோழர் கி. ராகவேந்திரன், ஆசிரியர், உழைக்கும் வர்க்கம்



                        
தோழர் கி. ராகவேந்திரன், ஆசிரியர், உழைக்கும் வர்க்கம்


வேதம்  புதிது:
             மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் சமீபத்தில் மைய அரசின் புதிய தேசிய அஞ்சல் கொள்கை குறித்த நகல் அறிக்கையை பிரகடனம் செய்துள்ளார். எங்கும் தாராளமயம்; எதிலும் தனியார் மயம் என்னும் உலகமயக் கோட்பாட்டின் நிர்ப்பந்தத்தின் பின்னணியில் அஞ்சல் துறையிலும் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உருவாகியது தான் இந்தப் புதிய தேசிய அஞ்சல்  கொள்கை என்பதை எளிதில் எவரும் அறிய முடியும். முன்னுரையில் பொதுவாக அனைவரும் ஏற்கத்தக்க ஓரிரு   உண்மைகளும் கலந்து இக்கொள்கைப் பிரகடனத்தை உருவாக்கித் தன் உண்மை நோக்கமான அஞ்சல் தனியார் மயத்தை அரசு அப்பட்டமாக நியாயப்படுத்த முனைந்துள்ளது. கூரியர்களோடு போட்டியிட்டு இந்திய அஞ்சல் சேவையைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் இதுகாறும் போதித்த தேசபக்த அரசு போதகர்கள் திடீரென்று பொதுவும் தனியாரும் இணைந்த கூட்டணி என்று படிக்க ஆரம்பித்திருக்கும் புதிய வேதம் தான் தேசிய அஞ்சல் கொள்கை.
சில உண்மைகள்:
(அ) அடிப்படை அஞ்சல் சேவை மீதான சார்பு: அமைச்சர் வெளியிட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தின் முன்னுரையில் சில பொதுவான உண்மைகள் தெளிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தில் சமீப ஆண்டுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் புரட்சிகரமானதும் வியக்கத்தக்கதுமான முன்னேற்றங்கள் அஞ்சல் துறை சார்ந்த கடிதப் போக்குவரத்து என்பதை காலாவதியாக்கிவிட்டிருப்பதை முன்னுரை சுட்டிக்காட்டியுள்ளது. இது உண்மை தான். இன்றைக்கு எவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதில்லை; மாறாக உடன் செல்போனில் பேசி விடுகின்றனர். பல பக்கங்கள் கொண்ட நீண்ட டாகுமெண்டுகள் கூட மின்னணு மெயில் [இ-மெயில்] மூலம் நொடியில் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பப்படுவதால், டாகுமெண்டுகளின் உண்மை நகல்கள் மட்டுமே கடிதங்கள் மூலம் அனுப்பப்பட்டாக வேண்டும் என்னும் நிலை உருவாகிவிட்டது. அடிப்படை அஞ்சல் சேவைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் அஞ்சல் இலாகாக்கள் உயிர் வாழ்வதே போராட்டமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படை அஞ்சல் சேவையல்லாத நிதி மற்றும் இ-வர்த்தகம் சார்ந்த சேவைகளில் விரிவுபடுத்திடும் அஞ்சல் துறை மட்டுமே, மாறிய சூழலுக்கேற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ள இயல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இது உண்மை தான்.
(ஆ) நவீனத்  தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி: அடுத்து, நவீன தொழில்நுட்பம் சார்ந்து அஞ்சல் நிர்வாகங்கள் உலகம் முழுதும் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்திக்கொண்டு வருகின்றன என்பதை அரசின் கொள்கைப் பிரகடனம் முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுவும் உண்மையே.
தனியாருடன் புனிதமற்ற உறவு:
அடிப்படை அஞ்சல் சேவையல்லாது இதர பல சேவைகளையும் விரிவுபடுத்தியே உயிர்வாழ இயலும் என்பதையும்; நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி அத்தியாவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுவது உண்மையில் அஞ்சல் சேவையில் தனியார் நுழைவை சட்டரீதியாக்குவதையும்; தனியார் சேவையாளர்களுடன் கூட்டு சேர்வதை நியாயப்படுத்துவதற்குமான அடித்தளமாகவே அரசு அமைத்துக்கொண்டுள்ளது.
                  சவால் சூழலில் அஞ்சல் சேவையாளர்கள் இண்டர்னெட் சார்ந்த வர்த்தகம் மூலம் தங்கள் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்ளக்கூடிய சிறந்த வாய்ப்புகளையும் புதிய சூழல் உருவாக்கித் தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வலுவானதும் சுயதேவை நிறைவுடையதாகவும் அஞ்சல் நிர்வாகம் இருப்பதன் மூலமே தனியார் துறைகள் மற்றும் இதர அரசு நிறுவனங்களுடன் லாபகரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும் என்று ஒருபுறம் கூறுகிறது. அதே சமயம் மறுபுறம் பல்வேறு அஞ்சல் சேவை வழங்குபவர்களும் உள்ள ஆதாரங்களை மேலும் மேலும் கூடுதலாகப் பகிர்ந்து கொண்டும், கூட்டுறவாகவும் செயல்படும் புதிய வியாபார மாடல்கள், பொருளாதார வல்லமை நாடுகளாக வளர்ந்து வரும் நாட்டுப் பொருளாதாரங்களில் உருவாகிவருகிறது என்றும் முன்னுரை கூறுவதன் நோக்கம் இந்தியாவிலும் அஞ்சல் துறைக்கும் தனியார் சேவையாளர்களுக்கும் இடையே ஒரு புனிதமற்ற உறவை உருவாக்கிக்கொள்வதை நியாயப்படுத்துவதே ஆகும்.
அஞ்சலில் டெலிகாம் மாடல் ரெகுலேட்டர்:
              சேவை வழங்குபவரும், சேவை வழங்குபவர்களை முறைப்படுத்துபவரும் தனித்தனியே இருக்கவேண்டும் என்பது பரவலாக விவாதிக்கப்பட்டாலும் இன்னமும் முழு அளவில் ஏற்கப்படவில்லை என்று முன்னுரையில் அரசு கூறிக்கொண்டே உண்மையில் அப்படிப்பட்ட கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை பலமாக உருவாக்குவதாகவே அஞ்சல் கொள்கை அமைந்திருக்கிறது.
               கடிதப் போக்குவரத்துக்கான ஏகபோகம் 1898-ம் ஆண்டின் இந்திய அஞ்சல் சட்டத்தால் மைய அரசுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், கடிதம் என்பது என்னவென்பது சரியாக வரையறுக்கப்படவில்லையாம்; ஆகவே எண்ணற்ற தனியார் கூரியர்கள் அஞ்சல் சேவைத் துறையில் புகுந்துள்ளதாகவும் கூறுகிறது. இவ்வாறு புலம்புவது உண்மையில் ஊரை ஏமாற்றவே என்று புரிந்துகொள்வது கடினமல்ல. தாராளமய உலகத்தில் 1981-ம் ஆண்டு முதலே நுழையச் சித்தமாகிவிட்ட மைய அரசு தன் கண்களை உலகமயத் துணிகொண்டு கட்டிக்கொண்டதால் தான் அஞ்சல் சேவையில் தனியார் நுழைவுக்கு வரவேற்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. ஆனால் தனியார்கள் நுழைந்துவிட்டதால் சிறந்ததாகவும் முறைப்படுத்தப்பட்டதுமான அஞ்சல் சேவை என்பதில் பிரச்சனை இருப்பதாகவும்; ஆகவே வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, வளரும் நாடுகளிலும் அஞ்சல் துறைக்கு கறாராக முறைப்படுத்தும் ஒரு ஏற்பாடு [effective governance mechanism] தேவை என்றும் புதிய  கொள்கை சிரமப்பட்டு விளக்குவதெல்லாம் .டெலிகாம் போன்றே அஞ்சல் சேவையிலும் தனியார் கூரியர் சேவையாளர்கள் சட்டரீதியாகவே செழித்துக் கொழிக்க வகைசெய்யும் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பினை நிறுவுவதற்காகவே. இது தாராளமயத்தின் பெயரால் உலக கார்ப்பரேட் தனியார் அஞ்சல் சேவையாளர்களுக்கு இந்திய அரசு காட்டும் சலுகை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
         சட்டரீதியானதும் நிறுவனம் சார்ந்ததுமான அவசரமான சீர்திருத்தங்கள் அஞ்சல் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தைக் கட்டுவதற்கு அத்தியாவசியத் தேவை என்றும்; முறைப்படுத்துதல், மார்க்கெட் வளர்ச்சி, உலக அஞ்சல் சேவை ஆற்றுவதற்கான கடமைகள் ஆகியவை இந்த சீர்திருத்த நடவடிக்கையின் முக்கிய அம்சங்கள் என்றும் கூறுகிறது கொள்கை அறிக்கை.
கொள்கையின் முக்கிய அம்சங்கள்
அஞ்சல் கொள்கை தனது அடிப்படை நோக்கங்களாக 12 அம்சங்களை முன்வைத்துள்ளது. அவைகளில் குறிப்பாக
முதல் நோக்கமாகக் குறிப்பிடப்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதும் நிர்வகிக்கப்படுவதுமான அஞ்சல் சேவை என்பதை அடைவதற்கான அரசின் அடிப்படை உத்திகளில், நுண்ணியதும், சிறியதும் நடுத்தர அளவிலுமான தனியார் அஞ்சல் சேவையாளர்களுக்கு முழு ஆதரவு அளித்து அஞ்சல் துறையில் சிறந்த தொழில்துறை உரிமையாளர்களை ஊக்குவித்தல் என்பது ஒரு உத்தியாகச் சொல்லப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் தனியார் அஞ்சல் சேவையாளர்களை ஊக்குவிப்பது என்பது தான்.

இரண்டாவது நோக்கமான அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்துவதை அதிகப்படுத்துவதற்கான அடிப்படை உத்திகளில் அஞ்சல் சேவை நெட்வொர்க்கில் உள்ள பலவீனமான இணைப்புகளின், அதாவது பலவீனமான கூரியர் சேவையாளர்களின், சக்தி மற்றும் திறமைகளை உயர்த்துதல் என்பதும் ஒரு அடிப்படை உத்தியாகச் சொல்லப்படுகிறது.

 மூன்றாவது நோக்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சேவைத் தரத்தை உயர்த்துதல் என்பதற்கான அடிப்படை உத்திகளில் நாடு முழுதும் மெயில்களை எடுத்துச்செல்லவும் பட்டுவாடா செய்யவும் உதவும் வகையில் நவீனமான போக்குவரத்து நெட்வொர்க்கை முன்னேற்றவேண்டும் என்று சொல்லப்பட்ட்டுள்ளது. ஆனால் எஞ்சியிருக்கும் M.M.S. mail  போக்குவரத்தைக் கூட நாசம் செய்யும் வகையிலும் பலவீனப்படுத்தும் வகையிலும் தனியார் கைகளில் மெயில் போக்குவரத்தை காண்ட்ராக்டர்கள் கைகளில் படிப்படியாக ஒப்படைத்து வரும் அஞ்சல் துறை எப்படி ஒரு நவீனமான போக்குவரத்து நெட்வொர்க்கை அமைக்கப்போகிறதோ தெரியவில்லை; தெளிவாகவும் இல்லை. உள்ள மெயில் போக்குவரத்து ஏற்பாடுகளைத் தகர்த்துக் கொண்டே நவீனமான ஏற்பாடுகளை உருவாக்குவது பற்றிக் கூறுவதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை. 

 நான்காவது நோக்கமான அஞ்சல் சேவை மற்றும் அதன் துணை உள்கட்டமைப்புகளை முன்னேற்றுதல் என்பதன் அடிப்படை உத்திகளில் தேசிய அஞ்சல் உள்ளமைப்பை கிராமப்புற மற்றும் சரியாக அஞ்சல் சேவையில்லாத பகுதிகளில் விஸ்தரிப்பதற்காக முதலீடுகளைக் கவர்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதென்பதும்; அஞ்சல் உள்கட்டமைப்பை பகிர்ந்துகொள்வது மற்றும் பங்காண்மைக் கூட்டுவாணிகம் ஆகியவற்றிற்கான வழிமுறைகளை உருவாக்குதல் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆறாவது நோக்கமாகச் சொல்லப்படுகின்ற அரசின் தேசிய திட்டங்களையும், இ-சேவைகளையும் செயல்படுத்த அஞ்சல் சேவைகளை பயன்படுத்துதல் என்பதற்கான அடிப்படை உத்திகளிலும் கூட அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையே கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்குதல் என்பது முக்கியமான உத்தியாகச் சொல்லப்பட்டுள்ளது.
 ஏழாவது நோக்கமாகச் சொல்லப்படுகிற மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடுதல் என்பதில் கூட அரசு மற்றும் தனியார் பங்காண்மைக் கூட்டு மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான மையங்களை உருவாக்குதல் என்பது அழுத்தம் தரப்பட்டுகிறது.
 எட்டாவது நோக்கமான அஞ்சல் சேவைத்துறையில் போட்டியை ஊக்குவித்தல் என்பதன் அடிப்படை உத்திகளில் கூட அஞ்சல் மார்க்கெட்டில் நியாயமான போட்டியை ஊக்குவிப்பதற்காக சட்டரீதியான அமைப்பையும் மேற்பார்வையையும் உருவாக்குதல் என்பது முக்கியப்படுத்தப்படுகிறது. இவையனைத்தும் தனியார் அஞ்சல் சேவையாளர்களை சட்டரீதியாக நிலைப்படுத்துவதும், ஊக்குவிப்பதும், அவர்கள் இந்திய அஞ்சல் துறையின் விரிந்த பரந்த கட்டுமாண அமைப்பை எப்படிக் கொள்ளையிட அனுமதிப்பது என்பதற்கான வழிமுறைகள் தான்.
அரசு சேவைகளை கைவிடுதல்:
          அஞ்சல் இலாகா ஆற்றிவரும் பல சேவைகளை வெளியாருக்கு சட்டரீதியாக மாற்றும் outsourcing கொள்கையைத் தான் அரசின் புதிய தேசிய அஞ்சல் கொள்கை பிரகடனப் படுத்துகிறது. இதைத்தான் அஞ்சல் கொள்கையின் அமைப்பு ரீதியானதும் மேற்பார்வைக்கான வரைச்சட்டத்தை முன்னேற்றுவதென்பதுமான ஒன்பதாவது நோக்கத்தின் அடிப்படை உத்திகளில் அஞ்சல் சேவைகளை மேற்பார்வை செய்யவும், இந்திய அஞ்சல் துறை சட்டரீதியான உரிமையோடு ஆற்றிவரும் சேவைகள், முறைப்படுத்துதல் மற்றும் கொள்கைகள் உருவாக்குதல் போன்ற ஏகபோகங்களைப் படிப்படியாக கைவிட்டு , முறைப்படுத்தப்பட்டதும் போட்டியின் அடிப்படையில் அஞ்சல் வர்த்தக மார்க்கெட்டை இயக்குவதை உத்தரவாதப்படுத்தும் ஏற்பாடாக “ அஞ்சல் வளர்ச்சி வாரியம்” ஒன்றை உருவாக்குவதை முன்வைக்கிறது. அதோடு 1898-ம் ஆண்டின் இந்திய அஞ்சல் சட்டத்தை தேசிய அஞ்சல் கொள்கையின் தேவைகளுக்கேற்ப திருத்திக்கொள்வதென்பதையும் அஞ்சல் கொள்கை முன்வைத்துள்ளது.
அஞ்சல் வாரியத்தை  முடக்கும் ஏற்பாடு:  
         ஓரளவுக்கு இந்திய அஞ்சல் துறையின் கொள்கைகளை உருவாக்கிக்கொள்வதில் பங்காற்றி வரும் அஞ்சல் வாரியத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதில் அஞ்சல் துறை செயலர் தவிர செயலர் [DE&IT]; செயலர் [வர்த்தகம்]; செயலர் [பொருளாதார விவகாரம்]; இரு அஞ்சல் வாரிய உறுப்பினர்கள் ஆகியோர் நிரந்தர உறுப்பினர்களாகவும்; இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள் [stakeholder bodies], அமைச்சகங்களின்  பிரதிநிதிகள் தற்காலிக  உறுப்பினர்களாகவும் செயல்படும் மேற்கண்ட ”அஞ்சல் வளர்ச்சி வாரியம்” எதற்காக? இந்த அஞ்சல் வளர்ச்சி வாரியம் தான் அஞ்சல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி(!) மற்றும் அஞ்சல் துறையின் பணிகள், கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை உருவாக்கம் போன்ற பணிகளை ஆற்றி போட்டிமிக்க, சிறப்பாக நிர்வகிக்கபப்டும் அஞ்சல் வர்த்தக மார்க்கெட்டை இந்தியாவில் உருவாக்குமாம்! உண்மையில் அஞ்சல் வாரியத்தை முடக்கும் ஏற்பாடு தான் இது. டெலிகாம் போன்றே தனியார் சேவையாளர்களுக்கு வசதியான வர்த்தகக் கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பை உருவாக்கிடுவதே அரசின் நோக்கம். தேசிய அஞ்சல் கொள்கைக்கேற்ற வகையில் 1898-ம் ஆண்டின் இந்திய அஞ்சல் சட்டத்தை திருத்துவதென்ற முடிவும் அடிப்படையில் இன்றுள்ள அஞ்சல் இலாகாவின் அரசியல் சட்ட ரீதியான அதிகாரங்களை அகற்றித் தனியார் சேவையாளர்களை சட்ட ரீதியாக இயங்க அனுமதிக்கவேண்டும் என்கிற தாராளமயத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அரசு அடிபணிந்துவிட்டதென்பதையே சுட்டிக் காட்டுகிறது.
அஞ்சல் ஆலோசனை வாரியம் ஏன்: 
        அதிகாரம் படைத்த அஞ்சல் வளர்ச்சி வாரியம் தவிர அரசு அதிகாரிகள், அஞ்சல் சேவையாளர்கள், மற்றும் இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள் கொண்ட அஞ்சல் ஆலோசனை வாரியம் ஒன்றும் அமைக்கப்படுமென்றும்; அந்த அமைப்பு தீவிரமான முறையில் அஞ்சல் கொள்கையை அமுலாக்க ஆலோசனைகள் வழங்குமென்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது அஞ்சல் துறையின் விரிந்த கட்டமைப்பையும் மூலாதாரங்களையும் எப்படிக் கொள்ளையடித்துத் தனியார் சேவையாளர்களை எப்படிக் கொழுக்க வைப்பதென்று ஆலோசனைகள் அளிக்கும் ஒரு அமைப்பாக இந்த ஆலோசனை வாரியம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அஞ்சல் நிர்வாகம் பலப்படுமா:
             அஞ்சல் கொள்கையின் பத்தாவது நோக்கம் சொல்வது போல் தேசிய அஞ்சல் நிர்வாகத்தை பலப்படுத்த அரசின் திட்டம் உதவுமா? தனியார் சேவையாளர்களும் அரசு சேவைத் துறையும் பரஸ்பரம் இணைந்து பணியாற்றி அனைவரது லாபகரமான செயல்பாட்டுக்கு ஏற்ற வியாபார சூழலை உருவாக்குவதென்ற அடிப்படை உத்தி போகாத ஊருக்குக் காட்டப்படுகிற ராஜபாட்டையாகும்.
முரண்பாட்டின் முச்சந்தியில்:
            வியாபாரப் போட்டி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைகளில் சிறந்த சேவை கிடைக்கும் என்பதால் அஞ்சல் சேவையில் போட்டியை ஊக்குவித்து கிராமப் புறங்களிலும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை எடுத்துச் செல்வதை உத்தரவாதப்படுத்த சட்டரீதியான ஏற்பாடு மூலம் கட்டுப்படுத்துவதே அரசின் கொள்கை என்று ஒருபுறம் அரசு கூறிக்கொள்கிறது. மறுபுறம் தனியார் மற்றும் அரசு அஞ்சல் சேவையாளர்களுக்கிடையே கூட்டை உருவாக்கி, கூட்டுறவு – பரஸ்பரம் தொடர்பு – மூலாதாரங்களை பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் நியாயமான போட்டியை வளர்ப்பதே தேசிய அஞ்சல் கொள்கையின் வழிகாட்டும் கொள்கை என்றும் அரசு கூறிக்கொள்கிறது. கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் நாம் நம்பியாக வேண்டும் என்பது போல் இருக்கிறது! எந்தத் தனியார் சேவையாளரும் கிராமப்புற வளர்ச்சி, எளிதில் சென்றடைய  முடியாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு சேவை ஆற்ற முன்வரப்போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. லாபத்தைத் தவிர எந்த இதர நோக்கமும் தனியார் சேவையாளர்களுக்கு இருக்கமுடியாதென்பதே மறுக்க இயலாத உண்மை.
குருட்டு vision திருட்டு mission:
          நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் சிறந்த வகையிலான கட்டமைப்பு மற்றும் நிர்வகிக்கப்படுவதுமான அஞ்சல் சேவையே தனது லட்சியம் [vision] என்று கூறும் அரசின் கொள்கை உண்மையில் அந்த லட்சியத்திற்கான பார்வையோடு செயல்படவில்லை; குருட்டுப் பார்வையுடன் நடைபோடுகிறது. அதுபோன்றே அதுபோன்றே சிறந்த அஞ்சல் சேவையை தனியார் சேவையாளர்களுடன் கூட்டுறவின் மூலமும் ஆரோக்கியமான போட்டியின் மூலமும் அடைவதை லட்சியமாக கூறும் அரசின் கொள்கை உண்மையில் தனியார் சேவையாளர்களுக்கு அரசு அஞ்சல் இலாகாவின் மிகப்பெரிய கட்டுமானம் மற்றும் ஆதாரங்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கும் ஏற்பாட்டை உருவாக்கிக்கொடுப்பதே திருட்டு லட்சியமாக உள்ளது என்பது தெளிவு. 
அந்நிய மூலதனத்தை கவர்தல்:  
           சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீடுகளைக் கவரும் சூழலை உருவாக்கிச் செயல்பட தேசிய அஞ்சல் கொள்கையின் 11-வது நோக்கம் வழிகாட்டுகிறது. சர்வதேச முதலீடுகள் பொதுவாக லாப நோக்கத்தால் கவரப்படுகின்றன. சேவை நோக்கத்தால் அல்ல. ஆகவே அஞ்சல் சேவையில் சர்வதேச முதலீடுகளைக் கவர்வது என்றால் லாப நோக்கத்தோடு சேவைகளை அமைத்துக்கொள்வதென்பதே பொருளாகும். அந்நிய முதலீடு, கொள்ளை லாபம் இவற்றுக்கு வழிவகுக்கும் கொள்கை என்பது தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவன்றி வேறல்ல. ஆகவே அடிப்படையில் மைய அரசின் தேசிய அஞ்சல் கொள்கை என்பது இந்திய அஞ்சல் சேவையை பன்னாட்டு உள்நாட்டு தனியார் கூரியர் கம்பெனிகளின் வேட்டைக்காடாக்குவதையும், இந்திய அரசு அஞ்சல் சேவையின் பெருத்த மூலாதாரங்களை அவர்களுக்குத் தாரை வார்ப்பதற்குமான அரசின் ஏற்பாடு தான்.
மேற்பார்வை செய்வதிலும் தனியார் நுழைவு:  
                  மேற்கண்ட அரசின் தேசிய அஞ்சல் கொள்கை அமுலாவதை மேற்பார்வையிடுவதற்கும், அமுலாவதை உத்தரவாதம் செய்துகொள்வதற்குமான ஒரு ஏற்பாட்டையும் தனியார் சேவையாளர் உள்ளிட்ட அனைவருடனும் கலந்து உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்றும் அரசின் கொள்கையின் 12-வது நோக்கம் கூறுகிறது.
சம்மேளனத்தின் எதிர்ப்பு:   
         NFPE சம்மேளனம் சமீபத்தில் அஞ்சல் துறை அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் அரசின் தேசிய அஞ்சல் கொள்கைக்கு எதிரான தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுதனியாருக்கு இந்திய அஞ்சல் சேவையை தாரை வார்க்கும் ஏற்பாடு தான் இந்தப் புதிய கொள்கை என்பதாலும்; இதனால் ஐந்து லட்சம் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் நலன் சூறையாடப்படும் என்பதாலும்; அரசின் தேசிய அஞ்சல் கொள்கைக்கு எதிராகக் கிளர்ந்தெழவேண்டும் என்று அறைகூவியுள்ளது. அப்படிப்பட்ட அடிப்படையான போராட்ட நிலைபாடு தான் அஞ்சல் ஊழியர்கள் நலனையும், இந்திய அஞ்சல் சேவையையும் பாதுகாக்கும் வழியாக இருக்க முடியும்.