CLICK TO VISIT LATEST POSTS

Saturday, September 19, 2015

September 19th _ Martyrs day

செப்டம்பர் 19 தியாகிகள் தினம்.
மத்திய அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றில் எவராலும் மறக்க இயலாத நாள். மத்திய அரசு 3 ஆம் ஊதிய குழுவை அமைத்த போது அதன் செயல்பாட்டு வரைமுறை குறிப்பில் " தேவைக்கேற்ற குறைந்தபட்ச  ஊதியத்தை " சேர்க்க மறுத்தது. ஆகவே, தேவைக்கேற்ற குறைந்தபட்ச  ஊதியம், பஞ்சபடியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை முதலிய 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. அரசின் திமிர்த்தனமும், ஊழியர்களை துச்சமென மதிக்கும் போக்கும் ஊழியர்களை மேலும் கொதிப்படைய செய்தது.
வேலை நிறுத்தம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். 10,000 மேற்பட்டோர் suspend செய்யப்பட்டனர். 3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். Casual .ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு, தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாத்பாய் அவர்களின் கண்டன உரை நாடாளுமன்றத்தை உலுக்கியது. அவரது உரையின் சில பகுதிகள் :
" வேலை நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்த வேலை நிறுத்தம் அரசியல் பின்னணி கொண்டது என்று கூறுகிறார்கள். எது அரசியல் பின்னணி ? ஒரு ஊழியன் தனது சாப்பாட்டுக்கு தேவையான 14 அவுன்ஸ் தானியம், 3 அவுன்ஸ் பருப்பு, சிறிது காய்கறி, கொஞ்சம் பால், இவற்றை வாங்கிட தேவையான சம்பளம் கேட்கிறான் . வருடத்துக்கு 12 மீட்டர் (குறைந்த பட்சம்) வேண்டும் என்கிறான். இதை பூர்த்தி செய்யும் கூலி தான் தேவை அடிப்படையிலான குறைந்த பட்ச ஊதியம் என்பது. இது அதிகம் என்று யாராலும் கூற முடியுமா ? இதில் அரசியல் நோக்கம் எப்படி வரும் ? புதிய பாரதம் பிறந்த தினத்தன்று சுதந்திர தினத்தில் ராவி நதிக் கரையில் மூவர்ண கொடியினை பறக்க விட்டு நாட்டு மக்களுக்கு நாம் கூறிய உறுதி மொழி இது தானே ? இதை கூட நிறைவேற்ற இந்திய அரசால் முடியாதா ...? 1957 இந்திய தொழிலாளர்  மாநாடு தேவை அடிப்படையிலான குறைந்த பட்ச ஊதியத்தை பரிந்துரை செய்தது. இதே கோரிக்கை தான் 1960 வேல நிறுத்த போராட்டத்தின் போதும் வலியுறுத்தப்பட்டது. மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.
அடக்கு முறையினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  மத்திய அரசு ஊழியர்களுக்கு தோல்வி இல்லை. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசுக்குத்தான் தோல்வி இது. "  நாத்பாயின் குரல் இன்றைக்கும் மத்திய அரசு ஊழியர் இயக்கங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அடக்குமுறையினால் வேலைநிறுத்தங்கள் தோல்வியுற்றது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் அவைகள் தற்காலிகமானதே. தொழிற்சங்கங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.  தியாகங்கள் வீணானதாக வரலாறும் இல்லை.
செப்டம்பர் -19- 1968 தியாகிகளுக்கு வீர வணக்கம் !