CLICK TO VISIT LATEST POSTS

Tuesday, November 24, 2015

தியாக வரலாறு அறிவோம் ! மறு அர்ப்பணிப்புக்கு தயாராகுவோம் !
NFPTE  இயக்கத்தின் முதல் மாபொதுச் செயலர் 

இன்று  சம்மேளன  தினம்  ... ஆம் சரியாக 61 வருடங்களுக்கு முன்னர்  , 24.11.1954 அன்றுதான்  NFPTE  என்ற வரலாற்று  சிறப்பு மிக்க  இயக்கம் அஞ்சல், தொலை பேசி ,RMS தந்திப் பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே   சம்மேளனமாக ,  ஒரே  இயக்கமாக  நமது துறையில்  உருவாக்கப்பட்டது . இந்த  ஒருங்கிணைப்பு என்பது அன்றைய மத்திய அரசுடன் செய்து கொண்ட  'ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம்' என்ற அடிப்படையில்  உருவாக்கப்பட்டது. NFPTE  இயக்கத்தின் முதல் மா பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர். B .N . கோஷ் என்று அழைக்கப் பட்ட  தோழர். பூபேந்திர நாத் கோஷ்  ஆவார்.NFPTE  இயக்கம் தான் அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களுக்கும் வழிகாட்டக் கூடிய அமைப்பாக செயல் பட்டது. NFPTE  இயக்கத் தலைவர்களால் 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம்.
NFPTE  இயக்கத் தலைவர்களால் முன்னோடியாக நின்று நடத்தப்பட்டதே 2ஆவது ஊதியக் குழு மீதான  1960 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட 5 நாட்கள் வேலை நிறுத்தம். இதன் முக்கிய கோரிக்கை Dr Aykroyd  Formula  அடிப்படையிலான  NEED BASED MINIMUM WAGES (தேவைக்கேற்ற  குறைந்த பட்ச ஊதியம் ).  இது  2016 இல் ஏழாவது ஊதியக் குழுவிலும்  இன்றுவரை தொடர்கிறது. ஆனால்  இன்று கூட  நாம்  ஏமாற்றப் பட்டுள்ளோம். 
1960இல் நடத்தப்பட்ட  2 ஆவது ஊதியக் குழு மீதான  5 நாட்கள் வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தம் அன்றைய ஜவஹர்லால் நேரு  தலைமையிலான காங்கிரஸ் அரசினால் Civil Rebellion ( உள்நாட்டு கலகம் ) என்று அறிவிக்கப்பட்டு, வேலை நிறுத்தத்தை அறிவித்த தலைவர்கள் கை விலங்கிடப்பட்டு கிரிமினல் குற்றவாளிகள் போல நடுத்தெருவில் இழுத்துச் செல்லப்பட்டு  சிறையில் அடைக்கப் பட்டனர். ESMO சட்டம் அறிவிக்கப்பட்டது. நீதித்துறை, நிர்வாகம், காவல்துறை என்று பலமுனைகளிலும் ஊழியர்கள் மீது  தாக்குதல்  தொடுக்கப்பட்டது . ஆயிரக் கணக்கான தோழர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் பல்லாயிரக் கணக்கான தோழர்கள்  SUSPEND செய்யப்பட்டனர்.  இரும்புக் கரம் கொண்டு போராட்டம் அடக்கப்பட்டது.. கோரிக்கை தோற்றது . ஆனாலும்  போராட்டம் மிகப்பெரிய  வெற்றியைப் பெற்றது.  தொடர்ந்த இயக்கங்கள் மூலம் பெருவாரியான தோழர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டனர்.  
மீண்டும் 19.09. 1968 இல்   3ஆவது ஊதியக் குழு முன்னர்  தேவைக் கேற்ற குறைந்த பட்ச ஊதியக் கோரிக்கை .  ஆனால் அன்றைய  இந்திராகாந்தி  தலைமையிலான காங்கிரஸ் அரசினால்  இந்த ஒரு நாள் வேலை நிறுத்ததைக்கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் தடியடி , கைவிலங்கு, சிறைத்தண்டனை, டிஸ்மிஸ், SUSPENSION  என்று அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. NFPTE  இயக்கம் தடை செய்யப்பட்டது. பதான்கோட்டில் ரயில் மறியல் செய்த தோழர்கள் மீது  ரயில் ஏவப்பட்டது. இதில்  5 தோழர்கள் பலியானார்கள்.  பதான் கோட், பிகானீர் , மரியான் , பொங்கைகான், இந்திரபிரஸ்தம்  போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் , ஊர்வலம் சென்ற தோழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 9 தோழர்கள் பலியானார்கள். 3 ஆண்டுகள் தொடர்  போராட்டங்களுக்குப் பிறகே NFPTE  இயக்கத்திற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இப்படி தியாக வரலாறு படைத்த   இயக்கமே NFPTE இயக்கம்  . உயிர்பலிகள்  தந்து ஊழியர்களுக்கு  உரிமை பெற்றுக் கொடுத்ததே  NFPTE  இயக்கம்.  தற்போதைய NFPE  இயக்கம்..  
நாம்  இந்த நாளில்  நம்  சம்மேளன  வரலாற்றை நினைவு கொள்வோம்.   ஏழாவது ஊதியக் குழுவின்  பிற்போக்கான, தொழிலாளர் விரோத பரிந்துரைகளுக்கு எதிராக  களம் இறங்குவோம்.  தியாகங்களை  ஏற்க  தயாராவோம்.  கோரிக்கைகளை வெல்லுவோம். இந்த நாளில்  இதற்கான  உறுதி ஏற்போம்.
வாழ்க  NFPE !                                                                          வளர்க  போராட்ட  உணர்வு !