வீர வெண்மணித் தியாகிகள் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்
-ஆர்.மனோகரன்,
தஞ்சாவூர்.
தஞ்சை மாவட்டம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று இல்லை. அன்று இருந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கக் கோட்டை தகர்ந்தது. அதை மாற்றியது செங்கொடி இயக்கம். அதற்காக அது கொடுத்த விலை, செய்த தியாகம் வரலாற்றில் பதிந்துவிட்டது. திருச்சி சிறையில் விஷமிட்டுக் கொல்லப்பட்ட தியாகி களப்பால் குப்பு, கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட தியாகி என். வெங்கடாசலம், சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகள் சிவராமன், இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், அவர்களைத் தொடர்ந்து களப் போராட்டத்தில் பூந்தாலங்குடி பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன், சிக்கல் பக்கிரிசாமி, செங்கொடி இயக்கத்தின் எழுச்சிக்கும் வெற்றிக்கும் போராடிய போராளிகள், நிலப்பிரபுத்துவக் குண்டர்ளால் கொலை செய்யப்பட்ட தியாகிகள்.
அறுபதுகளில் கீழத்தஞ்சையின் நிலவரம்
நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் கோலோச்சியக் காலம், பெரிய மனிதர்கள், மிட்டா மிராசுகளுக்கு இங்கு மைனர் பட்டம். ஆய்மழை மைனர், ஆவராணி மைனர், கருங்கண்ணி மைனர், கீழப்பிடாகை மைனர் - இப்படி ஊர்ப் பெயர்களில் இரண்டு, மூன்று கிராமங்களுக்கு ஒரு மைனர் இருப்பார். அதைப்போல பண்ணைகள் ஐவநல்லூர், செல்லூர், சிக்கல் கோவில் பண்ணைகள். இவற்றைவிட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த வலிவலம் தேசிகர், குன்னியூர் சாம்பசிவ ஐயர், நெடும்பலம் சாமியப்ப முதலியர், திருவாரூர் தியாகராச முதலியார் - இப்படி இவர்களின் சாம்ராஜ்ஜியமாகத்தான் அப்பகுதி முழுவதும் இருந்தன.
நிலப்பிரபுக்களின் ஆதிக்கமும், விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்களால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளும், கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவைகளாகும்.. இவர்களின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள அமைப்பு தேவை என்பதை செங்கொடி இயக்கம் உணர்த்தியது. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இதனை நன்கு உணர்ந்து ஒன்று திரண்டனர். மாவட்டம் முழுவதும் கிராமங்களில் செங்கொடி இயக்கம் பலமாக வேரூன்றியது.
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்
காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும்வரை வயல் வெளிகளில் வேலை செய்ய வேண்டும். மாலை 6 மணி வரை வேலை செய்துவிட்டு, உடனே கூலி பெற முடியாது. பண்ணையார் வீட்டிற்குச் சென்று வேலை செய்த களைப்போடு கால் கடுக்க இரவு 7.30 மணி அல்லது 8 மணிக்கு, நெல் கூலி பெற்று பின்னர்தான் வீட்டுக்குச் செல்ல முடியும். அதன்பிறகு, சமைத்துச் சாப்பிட்டுவிட்டுப் படுக்க இரவு 11 மணி அல்லது 12 மணி ஆகும்.
இந்நிலைமைகளை மாற்றிட செங்கொடி இயக்கத்தின்கீழ் கடுமையான போராட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. போராட்டத்தின் முதல் வெற்றியாக, காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, பிறகு 2 மணி முதல் மாலை 5 மணி வரை என்று வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இவ்வாறு கோரிக்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, அதனை அமல்படுத்துவதற்கும் போராட வேண்டியிருந்தது. வேலை முடியும் நேரம் 5 மணி ஆகவில்லை என்று கூறி இருட்டும் வரைக்கும் வேலை வாங்கிய நிலை பல இடங்களில் தொடர்ந்தது. இதற்கும் ஒரு முடிவு காணப்பட்டது, இதனையும் செங்கொடி இயக்கத் தொழிலாளர்களே அமைப்பின் மூலம் அமல்படுத்தினார்கள். வேலை தொடங்கும்நேரத்தையும், சாப்பாட்டிற்கான நேரத்தையும், வேலை முடியும் நேரத்தையும் நம் விவசாய சங்கத் தோழர் ஒருவர் மரத்தின் மேல் ஏறி நின்று தம்பட்டம் அடித்துத் தெரிவிப்பார். சில இடங்களில் தப்படிப்பதும், சில இடங்களில் கொம்பு ஊதுவதும் உண்டு. இவ்வாறு வேலைநேரத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் செங்கொடி இயக்கத் தோழர்கள் நிலைநாட்டினார்கள்.
பொதுவாக வேலைகளை காரியஸ்தர்கள், அடியாட்கள், பந்தோபஸ்துடன்தான் நடக்கும். ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசமில்லாமல் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவார்கள். கைக் குழந்தைகள் கூட கருவேல மரத்தில் தொட்டி கட்டிப் போட்டிருப்பார்கள். பெண்கள் நட ஆரம்பித்தால் குனிந்தபடியேதான் நட வேண்டும். நிமிர விடமாட்டார்கள். நடவு நடக்கும்போது, நிலப்பிரபுவோ, காரியஸ்தனோ பின்னாடியே நிற்பார்கள். கரையேறவும் முடியாது, தப்பித் தவறி இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டும் என்றால்கூட வயலிலேயேதான். அதற்கும் இவர்கள் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படி? பெண்களை இழிவுபடுத்துவதும், மான ஈனப்படுத்துவதும் மிக சர்வசாதாரணமான நிகழ்வுகளாக இருந்தன. நிலப்பிரபு, காரியஸ்தர்கள், அடியாட்கள் அத்துமீறும் நடவடிக்கைகள் அடிக்கடி நடக்கும். திடீர் என்று ஒரு தெருவிற்குள் புகுந்து ஒரு பெண்ணைப் பிடித்து இழுத்துச் செல்வார்கள். யாரும் ஏன் என்று கேட்க முடியாது, கேட்கவும் மாட்டார்கள். திரும்பவும் அவன் விடும்போதுதான் வரமுடியும்.
செங்கொடி இயக்கம் தலைமையேற்றபின் இந்தக் கொடுமைகளை எல்லாம் எதிர்த்தும் போராட வேண்டியிருந்தது. “பின்னாலே நிற்காதே, எதிரில் நில்’’ என்று கூறி அவ்வாறு நிற்க வைத்தது. பெண்களை அவமானப்படுத்துவதற்கெல்லாம் மரண அடி கொடுத்தது.
செங்கொடி இயக்கம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தைர்யத்தையும், நம்பிக்கையையும் ஊட்டி வளர்த்தது. “வாழ்வதை மானத்தோடு வாழ வேண்டும், நமது வாழ்வுரிமையை யாரும் பறிக்க அனுமதிக்கக் கூடாது. நிலப்பிரபுக்கள், அவர்களின் அடியாட்கள், காவல்துறையினர் ஆகியோரின் அட்டூழியங்களை ஒற்றுமையாக எதிர்த்து நின்று முறியடித்திட வேண்டும்,’’ என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது.
குனிந்தவர்கள் நிமிர்ந்தார்கள்
நாகப்பட்டினம் வட்டம், வடவூர் ஏ.எம்.பி. பண்ணையில் காரியஸ்தராக சாம்பசிவ சேர்வை என்பவரின் மச்சான் ராஜமாணிக்கம் இருந்தான். இவன், அரிசிப்படிக்கு ஆட்களைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, பண்ணையில் பாதுகாப்பில் ரவுடித்தனம் செய்துகொண்டிருந்தான். பக்கத்தில் உள்ள செட்டிச்சேரி கிராமத்தில் ஒருநாள் மதிய வேளையில் இராஜமாணிக்கம் வீடு புகுந்து ஒரு பெண்ணைக் கையைப்பிடித்து இழுக்க, அவனை ஆட்கள் எல்லாம் கும்பலாகக்கூடி, அடித்துப் போட்டு விடுகிறார்கள். அவன் பிரக்ஞையற்று விழுந்துவிடுகிறான். இதன்பின்னர் அனைவரும் பயந்துகொண்டு ஓடிப்போய் விடுகிறார்கள். ஒரு ஆள்மட்டும் ஓடவில்லை. அவர் நோயாளி. ஓடுவதற்கு முடியாதவர். அவர் யோசித்திருக்கிறார். “எப்படியும் செய்தி தெரிந்து அடியாட்களும், காவல்துறையினரும் வருவார்கள். நாம் மாட்டிக்கொள்வோம். கொன்றுவிடுவார்கள். நாம் சாகப்போவது நிச்சயம். அதற்குள் இவனுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டுச் சாவோம்,’’ என்று சொல்லிக்கொண்டே, வீட்டிற்குள் சென்று ஓர்அரிவாளை எடுத்து வந்து அடிபட்டுக்கிடந்த ராஜமாணிக்கத்தின் ஒரு கையை மட்டும் வெட்டித் தூக்கிப் போட்டுவிட்டார்.
அவர்கள் வந்து பார்த்தார்கள். ஆள் யாருமில்லை. இவன் மட்டும் இருக்கிறான். நோயாளி. அடித்தால் செத்துப்போய்விடுவான். இவன் எதுவும் செய்திருக்க மாட்டான் என்று சொல்லிக்கொண்டே, இராஜமாணிக்கத்தைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் உணர்வினை செங்கொடி இயக்கம் ஏற்படுத்தியது. இதன்பிறகு இந்தமாதிரியான அத்துமீறல்களும், அயோக்கியத் தனங்களும் முடிவுக்கு வந்தன.
விவசாயத் தொழிலாளர்கள் கட்டுப்பாடாக ஒன்றுபட்டிருந்ததால், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வெற்றி பெற முடிந்தது. விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள். நிலப்பிரபுக்கள் சாதி இந்துக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்தார்கள். ஆனால், பொருளாதார நிர்ப்பந்தங்கள் காரணமாக மத்தியதர ஆண்களும், பெண்களும் விவசாய வேலைக்கு வரவேண்டியதாய் இருந்தது. நடவு நடும்போது இரண்டு தரப்பு பெண்களும் ஒன்றாக நின்றார்கள். ஒரே வேலை, ஒரே கூலி, ஒன்றாக நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்தச் சூழலில் அவர்களிடம் சாதியைச் சொல்லி பிரிக்க முடியாத நிலைமை எதார்த்தமாக இருந்தது. சாதி வெறி என்பது நிலப்பிரபுக்கள் தூண்டிவிட்ட உணர்ச்சி என்பதைத் தவிர வாழ்க்கை நடைமுறையும் தரமும் இருவருக்கும் ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல், நிலப்பிரபுவோட வலையில் விழுந்திடாமல் அவர்களையும் அமைப்புக்குள் கொண்டுவருவதிலும் வழிகாட்டுவதிலும் செங்கொடி இயக்கம் முனைப்பாக நின்று வெற்றி கண்டது.
வெண்மணியில் நடந்தது என்ன?
வெண்மணிச் சம்பவம் தனியான நிகழ்வு அல்ல. கீழத்தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டத்தின் உச்சக்கட்டம். கூலி விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதையும், ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றி பெறுவதையும் சகித்துக்கொள்ள முடியாமல், நிலப்பிரபுக்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டு மேற்கொண்டார்கள். விவசாயத் தொழிலாளர்கள் தற்காப்பு நிலை எடுத்துச் செயலாற்றும்போது பதட்டமும், இயக்கத்தின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்தது.
ஆண்டைகள், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்று உருவாக்கிக் கொண்டு, கிராமங்கள் தோறும் செங்கொடியை இறக்கச் சொல்லியும், செங்கொடி சங்கத்தில் சேராதே என்று அடியாட்களை வைத்து மிரட்டியும் தாக்கத் தொடங்கினார்கள். குடிசை வீடுகள் கொழுத்தப்பட்டன. நிலப்பிரபுக்கள் கட்டவிழ்த்துவிட்ட காலித்தனங்களும், கொடுமையும் அதை எதிர்த்து வாழ்வா, சாவா என்ற போராட்டமும் கிராமங்கள் தோறும் வெடித்தன.
நெல் உற்பத்தியாளர் சங்கத்தைத் துவக்கிய ஆய்மழை மைனர் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கினான். அதன்பின் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலப்பிரபு வந்தான். திருமணமாகாதவன். கொடுங்கோலன். எங்கெங்கே விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் டிராக்டர்களில் அடியாட்களை அழைத்துக்கொண்டுவந்தான். இவன் ஜீப்பில் துப்பாக்கியுடன் வருவான். நேரடியாகப் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளான்.
அப்போது அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டும், வேலை தராமல் விவசாயத் தொழிலாளிகளை வெளியேற்றாதே என்றும் கோரிக்கைகளை முன்வைத்துத்தான் பல கிராமங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. இக்கொடுங்கோலன் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த கிராமங்களையெல்லாம் துவம்சம் செய்தான். இதன் தொடர்ச்சியாகத்தான் தன் சொந்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள கீழவெண்மணிக் கிராமத்திலும் அறுவடைக்கூலி 5 படியை 6 படியாக உயர்த்திக் கொடுக்க வேண்டும், அறுவடை செய்த நெல் அனைத்திற்குமான கூலி தர வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடக்கிறது.
கோபாலகிருஷ்ண நாயுடு, ஆட்களை கிராமத்திற்கு அனுப்பி, “செங்கொடியை இறக்குங்கள், நீங்கள் கேட்கிற கூலியை ஆண்டை தருவார்’’ என்று கூறச் சொன்னான்.
“எங்களை மரியாதையுடன் வாழ வைக்கும் செங்கொடியை நாங்கள் இறக்க மாட்டோம், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்,’’ என்று துணிவோடும், சங்கத்தின்மீது நம்பிக்கையுடனும் சொல்லி அனுப்பினார்கள்.
ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ண நாயுடு, தன் உறவினர் ராமு பிள்ளை மற்றும் அடியாட்களுடன் வெண்மணி கிராமத்திற்குள் இரவு 7.30 மணியளவில் நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்கள். ஜனங்களில்மீது நாட்டுத் துப்பாக்கியால் சுடுகிறார்கள். மக்கள் சுத்துபட்ட கிராமங்களை நோக்கி சிதறி ஓடுகிறார்கள். தப்பித்து ஓட முடியாதவர்கள் கிராமத்தில் கடைசியாக இருந்த ராமையாவின் குடிசைக்குள் போய் நுழைகிறார்கள். அவ்வாறு ஜனங்கள் குடிசைக்குள் நுழைந்ததைப்பார்த்த கோபாலகிருஷ்ணனின் ஆட்கள், குடிசையின் கதவை வெளியே தாழ் போட்டுவிட்டு, குடிசையைக் கொழுத்தி விடுகிறார்கள். கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒருவர் தப்பித்து வெளியே வரும்போது அவரை வெட்டி மீண்டும் தீயில் போடுகிறார்கள்.
வீடு தீக்குண்டமாய் எரிகிறது. குழந்தைகள், பெண்கள் அலறுகிறார்கள். ஒரு தாய், தன் பெண் குழந்தையை, “அதுவாவது பிழைத்துக்கொள்ளட்டும்,’’ என்று தூக்கி வெளியில் வீசுகிறாள். இறக்கமற்ற மனித மிருகங்கள், அக்குழந்தையையும், எரியும் தீயில் மீண்டும் வீசுகிறார்கள்.
டிசம்பர் 25 இரவு 7.30 மணிக்குத் துவங்கிய தாக்குதல் மறுநாள் காலை 2.30 மணிவரை தொடர்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 44 கண்மணிகள் நிலப்பிரபுத்துவத்தின் கோரத் தாண்டவத்திற்குப் பலியானார்கள். வெந்து மடிந்த வெண்மணி வீரத் தியாகிகள் “கூலி கேட்டதற்காக மட்டுமல்ல, செங்கொடியை இறக்க மாட்டோம்,’’ என்று காட்டிய உறுதிக்காகவும்தான் குருதி சிந்தினார்கள்.
இவர்கள் சிந்திய குருதி உழைக்கும் மக்களின் உறுதிக்கு எடுத்துக்காட்டு. அன்றைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படவும், இன்றும் செங்கொடியின் நிழலில் நின்று தீரமுடன் போராடவும், உத்வேகம் அளிக்கிறது, உழைக்கும் மக்களின் உரிமைப்போரில் மேலும் முன்னேற ஆளும் வர்க்கங்களின் சதியை முறியடித்து விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஒற்றுமையைப் பலப்படுத்திட, வீர வெண்மணித் தியாகிகள் நினைவை நெஞ்சில் ஏந்துவோம், வர்க்க ஒற்றுமை தீபத்தை உயர்த்திப் பிடிப்போம்.’’
---