புது தில்லி, ஜன. 25: அரசியல் கிரிமினல்மயமாகி வருவதும், தேர்தலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதும் பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதிகளைக் கடுமையாக்கி, அவற்றை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே குற்றப் பின்னணி உள்ளவர்களும், இதர தீய சக்திகளும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க முடியும்.
சிறந்த தேர்தல் நடைமுறைகள் மூலம் தேர்தலை நேர்மையாக நடத்தினால்தான் இளைஞர்கள், திறமையானவர்கள், தகுதியானவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவர். தேர்தலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதை கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
தேர்தல் என்பது வாக்குகளை விலைக்கு வாங்குவது அல்ல. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தகைய வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் மக்களின் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு தகுதியுடையவராவார்.
இலவசப் பொருள்கள் விநியோகம் அல்லது ஊடகங்களில் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளால் வாக்காளர்கள் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகலாம்.
எனவே, இத்தகைய மோசமான வழிமுறைகளைத் தடுóக்கத் தேவையான சட்டங்களையும், தேர்தல் நடைமுறை களையும் அறிமுகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.