ஒரு வழியாக அம்பேத்கர் திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத் திலும், இந்தியிலும் 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளை பெற்றும் நீதிமன்றம் தலை யிட்ட பின்னர்தான் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. அதிலும் தமுஎகச மற்றும் தலித் அமைப்புக்கள் சில முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது.
அம்பேத்கரின் மிகப் பெரிய பங்களிப்பு அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு. ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அம்பேத்கர் தான் வரைவுச் சட்டத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு பகலாக உழைத்து அவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறார். அந்த நிலையில் தான் தன்னைக் கவனித்துவந்த டாக்டர் சாரதா கபீரை 1948 ல் திருமணம் செய்து கொள்கிறார்.
அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல நல்ல அம்சங் களை இணைக்க முடிந்தாலும் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை உத்தரவாதம் செய்யும் பல அம்சங் களை அவரால் இணைக்க இயல வில்லை.
அம்பேத்கராக நடித்த, இல்லை வாழ்ந்த மம்முட்டி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு இப்படம் மூலம் கிடைத்தது சரியான தேர்வு.
மற்றொரு அம்சம் கூர்மையான வசனங்கள். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறும் போது கம்பீரமாக நடந்து வந்து தண்ணீரை குடித்து விட்டு, “வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடியுங்கள்” என பதிலடி கொடுக்கிறார்.
மிகுந்த மன உளைச்சலுக்கு பிறகு புனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு காந்தியிடம் “மகாத்மா அவர்களே உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். எல்லா நேரத்திலும் அது பயன் படாது” என கூறுவது தியேட்ட ரில் கைதட்டல் பெறுகிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் இந்து மதத்தின் ஒரு அங்கம் தான் என காந்தி வாதிடும்போது, கைவிரல்களை காட்டி “மேலே இருப்பவன் பார்ப்பனன், அடுத்து சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமர் - இதைத் தலைகீழாக மாற்ற முடியுமா?” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா?” என கேட்பதும் அருமை.
அம்பேத்கரை மையமாகக் கொண்டுள்ள படம் என்ப தால் அவருக்கு செய்யப்பட்ட ஒப்பனை, காந்தி, நேரு உள்ளிட்ட இதர கதா பாத்திரங்களுக்கு செய்யப்படவில்லை. காந்தியும் அம்பேத்கரும் முதலில் சந்திக்கும்போது காந்தி நடந்து கொள்ளும் விதமும், ‘அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவரா? புனேவை சேர்ந்த முற்போக்கு பிராமணர் என்று நினைத்தேன்’ என காந்தி கூறுவதும் ஆய்வுக்குரியவை.
எனினும், ஒரு சமூகப் போராளியின் - சட்ட மேதையின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த முறை யில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல - பாடமும்தான்.