CLICK TO VISIT LATEST POSTS

Wednesday, February 23, 2011

தில்லியில் உழைப்பாளர் பேரணி -ஆர்.சிங்காரவேலு

          அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உலகம் முழுவதும் உள்ள உழைப் பாளி மக்கள் தலையில் ஏகாதிபத்திய சக்தி கள் ஏற்றிவருகின்றன. தனியார் துறையின், பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டை யை பாதுகாக்க, இவை நடத்தும் கடும் உழைப்புச் சுரண்டல் தொடர மீட்பு நடவடிக் கைகளும், ஊக்குவிப்புத் திட்டங்களும் ஜாம் ஜாம் என அமலாக்கப்படுகின்றன. உழைப் பாளி மக்களின் வேலைக்கு, ஊதியத்திற்கு, சமூக பாதுகாப்பிற்கு, பென்சனுக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக கடந்த செப்டம்பர் 7ல் உலகம் முழுவதும், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுகுகூரு) அறைகூவலுக்கிணங்க வேலைநிறுத்தங் களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பிரான்சில் ஒரே மாதத்தில் 3 வேலைநிறுத்தம் நடந்தது.

       ஆப்பிரிக்க நாடுகளான டூனிஷியா, எகிப்து மற்றும் அரபு நாடுகளில் அரசியல் கொந்தளிப்புகள் அன்றாடச் செய்திகளாகி விட்டன.

    நம்நாட்டிலும், ஏகாதிபத்திய சக்திகளின் நிர்ப்பந்தத்தினால் இந்திய அரசு உழைப்பாளி மக்கள் மீது வரலாறு காணாத தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இதன் எதிர்விளைவாக, சங்க வித்தியாசமின்றி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் (தொமுச நீங்கலாக) மற்றும் வங்கி, காப்பீடு, பிஎஸ்என்எல் போன்ற துறை வாரி சம்மேளனங்களும் இணைந்து 2009 செப்டம்பரில் தில்லியில் சிறப்பு மாநாட்டை நடத்தின. 2009 அக்டோபர் 28ல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், டிசம்பர் 16ல் நாடாளுமன்றம் முன்பும், நாடு முழுவதும் தர்ணா போராட்டங்களும், 2010 மார்ச் 5ல் மறியல் இயக்கமும், ஜூலை 15ல் மாநாடும், செப்டம்பர் 7ல்10 கோடிப்பேர் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தமும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக தில்லியில் இன்று (பிப்ரவரி 23) வரலாறு படைக்கும் 5 லட்சம் உழைப்பாளர் பங்கேற்கும் மகத்தான பேரணி நடைபெறுகிறது.

        நாடு முழுவதுமிருந்து தொழிலாளர் படை மிகுந்த கோபாவேசத்துடன் தில்லி நோக்கி பயணிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டு களாக நீடித்து வரும் ஒற்றுமை மூலம் எத் தகைய கோரிக்கைகள் கூர்மையாக முன் வைக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.

விலை உயர்வு

அனைத்து அத்தியாவசியப் பொருட் களின், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்திய உணவுக் கழக குடோன்களில் 5.7 கோடி டன் உணவு தானியம் நிரம்பி வழிகிறது. ஆனாலும் பட்டினிச் சாவுகள் தொடர்கின் றன. தற்கொலைகள் தொடர்கின்றன. பொது வினியோக முறையை வலுப்படுத்த அரசு தயாராக இல்லை. பதுக்கல், ஊக வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க காணோம்! முன் பேர பதிவு வர்த்தக தடை என்ற கோரிக்கை உதாசீனப்படுத்தப்படுகிறது.

பெட்ரோல் விலை மீதான அரசு கட்டுப் பாடு கைவிடப்பட்டதன் விளைவாக கடந்த 7 மாதங்களில் ரூ.11 பெட்ரோல் விலை உயர்ந் துள்ளது. பருத்தி, நூல்விலை உயர்வு ஜவுளித் தொழிலையும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கட்டுமான தொழிலையும், இரும்பு, உலோகம் போன்ற மூலப் பொருட் களின் விலை உயர்வு சிறு, குறு இன்ஜினி யரிங் தொழிலையும், தங்க விலை உயர்வு நகைத் தொழிலையும் அழித்து வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன், ஜப் பானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கை யெழுத்திடப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனிய னுடன் இதற்கான பேச்சுவார்த்தை தீவிரம் பெற்று வருகிறது. நமது நாட்டு நிதித்துறை சந்தை, சில்லரை வணிகம், விவசாயம் உட் பட சந்தைகளை தாராளமாய் திறந்துவிடக் கோரி அமெரிக்க ஒபாமாவும், இதர சக்திகளும் கோரி வருகின்றன.

மேற்குவங்கம், கேரளா, தமிழகம், அசாம் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் டீசல், மண் ணெண்ணெய், எரிவாயு விலை மீதான அரசின் கட்டுப்பாட்டை தளர்த்தும் ஆபத்தும் உள்ளது.

தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கம்

அரசும், சட்ட அமலாக்கப் பிரிவும் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கு சேவகம் செய்கின்றன. 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு பயன்கள், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர சக்தி, காண்ட்ராக்ட் சட்டம் போன்ற அனைத்தும் பல பத் தாண்டுகள் நடந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் பலன்கள் ஆகும். ஆனால் இன்றோ, இவை அனைத்தும் அரசால், முத லாளிகளால், பன்னாட்டு கம்பெனிகளால் தங்குதடையின்றி மீறப்படுகின்றன.

ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு கூட பல தடை கள்! பொது இடங்களில் கொடி ஏற்றுவது, சுவரெழுத்து, பேனர்கள் வைப்பது, பல பெரு நகரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. பேரணி, ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் நடத்த நீதிமன்றங்கள் தடை விதிக்கும் கொடுமை!

பாதுகாப்பு விதிகள் சரிவர பின்பற்றப் படாததால் பால்கோ கம்பெனி சிம்னி விபத்து, ஆக்ரா ஷூ கம்பெனிகளில் தீ விபத்து, தில்லி மெட்ரோ திட்டம், காமன்வெல்த் விளையாட் டுப்போட்டி கட்டுமானப் பணிகளில் ஏராளமான விபத்து.

காஜியாபாத் நிப்பான் ஆலையில் குண்டர் ஒருவர் மேனேஜராக நியமிக்கப்பட்டார். ஆலைக்குள் ரிவால்வருடன் மிரட்டி இவர் பவனி வருகிறார்!

ஹோண்டா (ஹரியானா), லிபர்டி (கர்நூல்) பாக்ஸ்கான், பிஒய்டி, ஹூண்டாய்(தமிழகம்), ஹீரோ சைக்கிள் (லூதியானா), மகீந்திரா & மகீந்திரா (நாசிக்) போன்ற பல தனியார் ஆலை களில் தொழிற்சங்கம் அமைத்ததற்காகவே பெருமளவு பழிவாங்குதல் நடைபெற்றுள்ளது. கை விலங்கு மாட்டி தோழர் அ.சவுந்தரராசன் போன்ற தலைவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் அத்துமீறல், அநாகரீகம் நடைபெற்றது.

வேலையின்மை

வேலையில்லாக் கால நிவாரணம் இல் லாத நம்நாட்டில், ஏதேனும் தகுதிக்கும் குறை வான வேலையையாவது செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது! ஏற்றுமதி ஆர்டர்கள் பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். விவசாயம் மற்றும் உள்கட் டமைப்பு திட்டங்களில் பெருமளவு அரசு முதலீடுகளை அதிகரித்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, ரூ.80 லட்சம் கோடிக்கும் மேல் நம் நாட்டு செல்வத்தை வெளிநாட்டு வங்கிகளில் வீணாக டெபாசிட் செய்யப்பட்டதை கைப்பற்றவோ அரசுக்கு திராணி இல்லை!

அளவு கடந்த தனியார்மயம்

பொதுத் துறையின் ரிசர்வ் மற்றும் உபரி நிதி ரூ.5லட்சம் கோடியை பயன்படுத்தி நலி வுற்ற பொதுத்துறைகளை புனரமைக்கவும், விரிவாக்கவும் வேண்டும். நாட்டின் சுயசார்பு இறையாண்மை குறித்தோ, காமதேனு போல அரசுக்கு வற்றாத ஊற்றாய் வரிகள், லாபப் பங்கீடு வழங்கிடும் பொதுத்துறை பாதுகாப்பு குறித்தோ அரசுக்கு அக்கறை இல்லை. இந்த நிதி ஆண்டிலேயே ரூ.59000 கோடி பொதுத் துறை பங்கு விற்பனை மூலம் திரட்டுவது அரசின் குறிக்கோள்! தகவல் தொடர்பு, விமான போக்குவரத்து, பெட்ரோலியம், எரிசக்தி போன்ற பல துறைகளில் பொதுத் துறை ஓரங்கட்டப்பட்டு வருகிறது.

முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு

2008 டிசம்பரில் அகில இந்திய முறை சாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் நிறைவேறியது. ஆனால் வறுமைக்கோட்டின் பெயரால் 90 சதவீதத்திற்கு மேலான தொழி லாளர்க்கு எந்த சமூக பாதுகாப்பு திட்டமும் அமலாகாத நிலை. அனைத்து முறைசாரா தொழிலாளர்க்கும் சட்டம் பொருந்த வேண் டும். சட்டத்தை அமலாக்க மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். அரசு வெறும் ரூ.1000 கோடி ஒதுக்கி, தொழிலாளர்களை வஞ்சித் துள்ளது. தேசிய சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்த, வருமான வரி கட்டுவோரிட மிருந்து ஒரு தீர்வை (ஊநளள) விதிக்கலாம் என்ற மத்திய சமூக பாதுகாப்பு வாரியத்தின் பரிந் துரையை அரசு ஏற்கவில்லை. அங்கன்வாடி சமூக நல ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப் புச் சட்டத்தை பொருத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் அரசு ஏற்கவில்லை.

பேரணி-ஆர்ப்பாட்டம்

அனைத்துப் பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக இன்று தில்லியில் நடைபெறும் 5 லட்சத்திற்கும் மேல் உழைப்பாளிகள் பங்கேற்கும் பேரணி அரசி யல் முக்கியத்துவம் வாய்ந்தது.

தில்லியில் பேரணி நடக்கும் அதே நாளில் (பிப்ரவரி 23) சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், வாலிபர், மாணவர், மாதர் மற்றும் சகோதர அமைப்புகள் சார்பில் அனைத்து மாவட் டங்களிலும் பெரும் திரளாக ஆதரவு இயக்கம் நடைபெறுகிறது.

-கட்டுரையாளர், சிஐடியு
தமிழ் மாநிலக்குழு தலைவர்