CLICK TO VISIT LATEST POSTS

Thursday, February 24, 2011

parliament news

                             புதுதில்லி, பிப். 23: பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரிச் சலுகை அளிப்பதை நிறுத்திவிட்டு அந்தத் தொகையை ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கப் பயன்படுத்துங்கள் என்று அரசுக்கு அறிவுரை கூறினார் சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்). குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் புதன்கிழமை பேசுகையில் இந்த அறிவுரையை அவர் கூறினார். "இந்தியாவில் இப்போது 2 வகையான மக்கள்தான் வசிக்கின்றனர். ஒரு பிரிவினர் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் அளவுக்கு ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடும் சக்தி உள்ளவர்கள்). மற்றவர்கள் பி.பி.எல். (வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கிறவர்கள்).2,25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஓராண்டில் வரிச் சலுகை அளித்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கையை உடனே கைவிட்டு ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்க முற்போக்கு நடவடிக்கைகளை எடுங்கள். பணக்காரர்களுக்குக் கொடுக்கும் வரிச் சலுகையை ரத்து செய்து அந்தத் தொகைக்கு அனைவருக்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களைக் கிடைக்கச் செய்திருந்தால் விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய மூன்றிலும் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் தேவையும் பெருகியிருக்கும். அதனால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றிருக்கும். பெட்ரோல் விலை 7 முறை உயர்வு: கடந்த 8 மாதங்களில் பெட்ரோலின் விலையை 7 முறை உயர்த்தியிருக்கிறீர்கள். பெட்ரோலியத் துறை மூலம் மட்டுமே ரூ.2,22,000 கோடி திரட்டியிருக்கிறீர்கள். இதன் மூலம் பணவீக்கத்தை நீங்களே தூண்டிவிட்டிருக்கிறீர்கள். ஏழைகளுக்குக் கொடுக்கும் உணவு மானியத் தொகையையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஒப்பிட்டு இரண்டுமே பொது நலனுக்கான மானியச் செலவுதான் என்று பிரதமர் நியாயப்படுத்தியிருக்கிறார். இந்த வாதமே போலியானது. அரிசி, கோதுமைக்கு தரும் மானியம் வளர்ச்சிக்கு எதிரானது. ஆனால் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் அளிக்கும் வரிச் சலுகைகள் வளர்ச்சிக்கு உதவுவது என்று எப்படித்தான் நாக்கூசாமல் கூறுகிறீர்கள் என்றே வியப்பாக இருக்கிறது. 2-ஜி ஊழல்: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்குப் பிறகு இந்தத் துறையில் உள்ள தொழிலதிபர்கள் மீது வரி விதிப்பதில்லை என்று முடிவெடுத்தீர்கள். ஆனால் உரிமம் பெற்ற தொழில் அதிபர்களோ ஆறு மாதங்களுக்குள் அவற்றை 6 மடங்கு (600%) லாபத்துக்கு மற்றொரு தொழில் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். இந்த இடத்தில்தான் ஊழலே நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருகிறீர்கள்? நாடாளுமன்ற கூட்டுக்குழு: நாடாளுமன்ற கூட்டுக்குழுவே விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன் காரணம், அரசு நிர்வாக எந்திரத்தைத் தொழிலதிபர்கள் எப்படி தங்களுடைய லாப நோக்கத்துக்கு ஏற்ப வளைக்கிறார்கள், அதற்கு எந்த நடைமுறைகள் எல்லாம் பயன்படுகின்றன என்று அறிவதற்காகத்தான். அதை அப்போதே ஏற்றிருந்தால் நாடாளுமன்றத்தின் ஒரு தொடர் வீணாகியிருக்காது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியா இது? சமுதாயத்தின் அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம் என்று முழங்குகிறீர்கள், ஆனால் நடைமுறையில் ஏழை, பணக்காரர் இடைவெளி பெருகும்வகையில்தான் நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று கூறினால், அப்படியெல்லாம் இல்லை, இது வெறும் அனுமானம்தான் என்கிறீர்கள். ஏன் என்றால் சர்வதேசச் சந்தையில் இதுபோன்ற சேவைகளுக்கு அரசுகள் வசூலிக்கும் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இலவசமாகவே தொழில் அதிபர்களுக்கு வாரி வழங்குவது என்று முடிவு செய்திருந்ததால் உங்களைப் பொருத்தவரை இதில் வருவாய் இழப்பே கிடையாது. 35 கிலோ அரிசி திட்டம்: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வருவாயை இழக்காமல் அரசு பெற்றிருந்தால் குறைந்த விலைக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை என்ற பொது விநியோக திட்டத்தை நாட்டின் 80% மக்களுக்கு விரிவுபடுத்தியிருக்கலாம்; அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாகச் செலவிட்டிருக்கலாம். அரசு, தனியார் பங்கேற்பு திட்டம் (பி.பி.பி.): சில வகை திட்டங்களில் அரசு, தனியார் கூட்டு சேர்ந்து செயல்படுத்தலாம் என்கிறீர்கள். அடித்தள கட்டுமான மேம்பாட்டுக்கு இதை அமல்படுத்தலாம் என்று குடியரசுத் தலைவர் உரையிலும் தெரிவித்திருக்கிறீர்கள். இந்த நடைமுறையால் லாபமும் இல்லை, தரமும் இல்லை, குறித்த காலத்தில் வேலையும் நடப்பதில்லை என்பது மேற்கத்திய நாடுகளின் அனுபவம். லண்டன் மாநகர போக்குவரத்து மேம்பாட்டுக்காக இப்படி 25 திட்டங்களைத் தொடங்கி பிறகு அவற்றில் 23 திட்டங்களிலிருந்து அரசு பின்வாங்க நேர்ந்தது. நம் நாட்டிலேயே கூட தில்லி விமான நிலையத்துக்கானமெட்ரோ ரயில் இணைப்புத் திட்டம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக பூர்த்தியாகவே இல்லை. இதுவும் பி.பி.பி. திட்டம்தான். பொதுப் பணத்திலிருந்து தனியார் லாபம் சம்பாதிக்கும் திட்டமாகவே இது இருக்கிறது. மாவோயிஸ்டுகளால் ஆபத்து: உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை ஆபத்தாக இருக்கிறது. மாவோயிஸ்டுகள்தான் இந்த நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்கிறார் பிரதமர். ஆனால் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒருவரோ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா மாவோயிஸ்டுகளையும் விடுதலை செய்துவிடுவோம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். மாலேகாம் குண்டுவெடிப்பு: மகாராஷ்டிரத்தின் மாலேகாம் என்ற நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களைத் தவறாகக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது அரசு. அவர்களை உடனே விடுதலை செய்யாவிட்டால் பயங்கரவாதத்தின் தொழுவமாக நம் நாடு மாறிவிடும். கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களில் பலர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதத்தில் அரசு நஷ்ட ஈடு தரப்போகிறது? அமெரிக்கா சொல்படி: வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா சொல்வதைக் கேட்டு நடப்பதே இப்போது நடைமுறையாகிவிட்டது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ச்சி நடத்தி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார்கள். இந்தத் தகவல்கள் வரத் தொடங்கியபோதும் அரசு மெளனமாகவே இருந்தது. பதவியில் இருந்தது போதும் சுமுகமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவிடுங்கள் என்று முபாரக்குக்கு அமெரிக்கா அறிவுறுத்திய பிறகே இந்திய அரசும் அதே தொனியில் அறிக்கை வெளியிடுகிறது. ஈரானிடமிருந்து குழாய் மூலம் பெட்ரோலிய வாயுவைக் கொண்டுவரும் திட்டத்திலும் அமெரிக்காவின் விருப்பத்துக்கேற்பச் செயல்படுவது என்ற அரசின் முடிவு வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிகிறது. அமெரிக்கா இப்போது சர்வதேச அரங்கில் செல்வாக்கு இழந்து பலவீனமாகி வருகிறது. இந்த நிலையில் ஈரானிடம் பெட்ரோலிய எரிவாயுவைப் பெறுவதற்கு முனைப்பு காட்டாவிட்டால் அந்த திட்டத்தில் சீனா சேர்ந்துவிடும். வெளியுறவுக் கொள்கையில் நம்முடைய தனித்தன்மையை இந்தியா உறுதி செய்ய வேண்டும்' என்றார் யெச்சூரி