CLICK TO VISIT LATEST POSTS

Friday, April 8, 2011

யார் இந்த ஹசாரே?


 ""சாவை கண்டு நான் பயப்படவில்லை. நான் இறந்து விட்டால், எனக்காக அழுவதற்கு, குடும்பம் என்று யாரும் இல்லை. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறேன். ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படையான அணுகுமுறை அவசியம். நேர்மையான அதிகாரிகளை, அடிக்கடி இடமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேறும் வரை, என் போராட்டத்தை தொடர்வேன்!'' - அன்னா ஹசாரே



* அன்னா ஹசாரே, மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், 1940ல் பிறந்தவர்.



* இந்திய ராணுவத்தில் டிரைவராக பணிபுரிந்தவர். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது எல்லாம், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே போன்றோரின் புத்தகங்களை படித்தார். இதனால், இவருக்கு சமூக சேவை செய்வதிலும், அஹிம்சையிலும் ஆர்வம் ஏற்பட்டது.



* 1978ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, முழு நேர சமூக சேவகரானார்.



* ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராட்டங்களை நடத்தினார். இவரின் பெரும்பாலான போராட்டங்கள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரானதாக அமைந்தது.



* இவரின் தீவிரமான போராட்டம் காரணமாக, 1995-96ல், அப்போதைய மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா - பா.ஜ., அரசை சேர்ந்த ஊழல் அமைச்சர்கள் இரண்டு பேர் நீக்கப்பட்டனர்.



* 2003ல், ஹசாரேயின் போராட்டம் காரணமாக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த நான்கு பேருக்கு எதிராக, மகாராஷ்டிரா அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது.



* இவரின் போராட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த சரத் பவார், பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகள், அவரை "பிளாக் மெயில் மனிதர்' என கடுமையாக விமர்சித்தனர்.



* தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.



* ஹசாரேயின் பெரும்பாலான போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களாகவே இருந்தன.



* ஊழலுக்கு எதிரான இவரின் போராட்டங்களுக்கு மேதா பட்கர், கிரண் பேடி, ஆன்மிக தலைவர்கள் சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ் போன்றோர், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.



* இவருக்கு சொத்து இல்லை; வங்கியில் ஒரு பைசா கூட சேமிப்பும் இல்லை என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம்.



* அகமது நகர் மாவட்டம், சித்தி நகர் கிராமத்தில் யாதவபாபா கோவில் அருகே உள்ள, பத்துக்கு பத்து சதுரடி கொண்ட ஒரு சிறிய அறை தான் இவரது வசிப்பிடம்.



* இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதரா என, ஆச்சர்யப்பட வைக்கும் இவர் தான், தற்போது, ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக, மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.



நாட்டை அவமதித்த ஊழல்கள்



1975ம் ஆண்டு: லாட்டரி ஊழல்

1990-99ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்

1992ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்

1993ம் ஆண்டு: ஹவாலா

1996ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல். முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.

1999 முதல் 2001 வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2008ல் இவர் தண்டிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழலை தெகல்கா வார இதழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பங்காரு லட்சுமணன், ஜெயா ஜெட்லி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2003ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)

2005ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.

2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

2010ம் ஆண்டு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்