CLICK TO VISIT LATEST POSTS

Friday, April 8, 2011

ஹஸாரேவுக்கு பெருகுகிறது ஆதரவு

புது தில்லி, ஏப்.7: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதியும் சமூக சேவகருமான அண்ணா ஹஸாரேவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இதனிடையே, லோக்பால் திருத்த மசோதாவை வடிவமைக்க கூட்டுக்குழு நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் ஹஸாரேயின் பிரதிநிதிகள் இரு சுற்றுப் பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
        அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லோக்பால் என்ற அமைப்பை உருவாக்க மசோதா கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி ஹஸாரே தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது பிரதிநிதிகளாக சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மத்திய அமைச்சர் கபில் சிபிலை புதன்கிழமை நள்ளிரவு இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அந்த குழுவுக்கு ஹஸாரேயை தலைவராக நியமிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கூட்டுக் குழு அமைப்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றார். இந்த நிலையில் இந்த குழுவுக்கு பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என அரசு தரப்பு தெரிவித்ததாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறின.
தொடர் உண்ணாவிரதம் குறித்து ஹஸாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
என்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும். எனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்.

மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.



முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர்தான் இந்த கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவேண்டும். கூட்டுக்குழுவுக்கு தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி கூட்டுக் குழு அமையும்பட்சத்தில் அதில் உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.
லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்படும் எந்த குழுவிலும் தான் இடம் பெறவேண்டுமானால், அந்த குழுவில் சோனியா காந்தியும் உறுப்பினராக இடம் பெறவேண்டும் என்றார் அவர்.



      ஆதரவு தெரிவிக்க மிஸ்டுகால் ஹஸாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 022 - 61550789 என்கிற செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கும்படி அவரது ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.